valimai

Advertisment

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாகதெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தடைப்பட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு இடையே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்து தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.

இதற்கிடையே ‘வலிமை’ படத்தில் இடம்பெற்றுள்ள 'நாங்க வேற மாதிரி...' என்ற பாடல் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்பாடலுக்கான வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத, யுவன்ஷங்கர் ராஜாவும் அனுராக் குல்கர்னியும் இணைந்து பாடியிருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் பாடல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவந்த நிலையில், தற்போது யூடியூப் தளத்தில் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்து '25 மில்லியன் பார்வைகள்' என்ற சாதனை மைல்கல்லைத் தொட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்திவருகின்றனர்.