தமிழ் சினிமாவில் தன் பாடல் வரிகளால் பெரும் ரசிகர் கூட்டத்தை தன் வயப்படுத்தியவர் கவிஞர் நா.முத்துகுமார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு காலமானார். இவரது, மறைவிற்குப் பிறகு நா.முத்துக்குமாரின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் திரையுலகம் 'ஆனந்தயாழை' என்ற பெயரில் ஒரு நினைவு இசை நிகழ்ச்சி நடத்தியது. அந்நிகழ்வில் வந்த பணத்தில் அவரது குடும்பத்தினருக்கு வீடு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரபல பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசிய போது நா.முத்துக்குமாருடன் மிகுந்த நெருக்கமாக இருந்ததாகக் கூறியிருந்தார். வேறு சில பேட்டிகளில் முத்துக்குமாருக்கு உதவியாளராக இருந்ததாக, சில பாடல்களுக்கு தான் உதவி புரிந்ததாகவும் அர்த்தப்படும்படி கூறினார்.
இந்தப் பேச்சுக்கு தற்போது நா.முத்துக்குமாரின் சகோதரர் நா.ரமேஷ்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். “எங்கள் அண்ணன் நா.முத்துக்குமாருக்கு உதவியாளராக கார்த்திக் நேத்தா ஒரு போதும் இருந்ததில்லை. அதோடு பாடல் எழுதவும் உதவி புரிந்ததில்லை. எனக்குத் தெரிந்து கார்த்திக் நேத்தா, முத்துக்குமாருக்கு நெருக்கமாக இருந்ததில்லை. அவருக்கு ஒரே உதவியாளர்தான் இருந்தார். அது கவிஞர் வேல்முருகன் மட்டுமே" என்று விளக்கம் அளித்துள்ளார்.
கவிஞர் வேல்முருகன் 'நேரம்' படத்தில் புகழ் பெற்ற பாடலான 'காதல் என்னுள்ளே' பாடலை எழுதியவர். தற்போது படங்களில் பாடல்கள் எழுதுவதோடு படம் இயக்குவதற்கான முயற்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.