Skip to main content

நா.முத்துக்குமாரும் புலிட்சர் விருதும்!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020

 

na muthukumar

 

வாழ்க்கையின் வலிகள் மகிழ்ச்சிகளை கழித்துக்கொண்டே வருகின்றன. எதுவரை என்றால், ஒரு கட்டத்தில் மகிழ்ச்சியே இல்லாமல் போகும் அளவிற்கு.
                                                                                                      -        கெவின் கார்ட்டர்.


இயக்குனர் ராம் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த ’தரமணி’ என்ற திரைப்படத்தில் ”பாவங்களை சுமந்துகொண்டு எங்கே செல்கிறோம்.. நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் மண்ணுக்குள் செல்லுகிறோம்” என்ற பாடல் குற்ற உணர்ச்சிக்கு ஆளான நாயகனின் வலிகள் சுமந்த நாள்களை, கனம் பொருந்திய வரிகளை மிக உண்மைத்தன்மையாக கவிஞர். நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.

 

குற்ற உணர்ச்சிகள் கொண்ட மனிதர்கள் தனிமையில் அலைபவர்களாகவும், போதையில் திளைப்பவர்களாகவும், வெறுமனே ஊர்சுற்றுபவர்களாகவும் மட்டும் இருப்பதில்லை. மாறாகக் காதலிப்பவர்களாகவும், கல்யாணம் செய்து குழந்தை குட்டி பெற்றவர்களாகவும், பெரிய பெரிய தொழில் செய்பவர்களாகவும், உயர்ந்த பதவியில் அதிகாரம் செலுத்தக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் காலுக்குக் கீழே இருக்கக் கூடிய நிலத்தை யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒரு நினைவு வந்து இழுத்துவிட்டு இடறி விழவைக்கக்கூடிய அந்தத் தருணம் வரும்வரை திடகாத்திரமாக இருந்தவர்கள் திடுமெனெ தற்கொலை செய்து கொள்பவர்களாக மாறிவிடுகிறார்கள்.


1993ஆம் வருடம் மார்ச் மாதம் தெற்கு சூடானில் உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட பஞ்சத்தால் மக்கள் பசியில் மடிந்துகொண்டிருந்தனர். அதனைப் படம்பிடிக்க தன்னார்வலராக கெவின் கார்ட்டர் என்ற தென்னாப்பிரிக்க இளைஞன் செல்கின்றான். பாதுகாப்பில்லாத அந்நாட்டில் தன்னுடைய கைக்கடிகாரத்தை விரும்பும் ஒரு ராணுவ சிப்பாயிடம் அதனைக் கழட்டிக்கொடுத்து தனக்கு துணையாக வைத்துக்கொண்டு அச்சூழலை படமெடுக்கத் தொடங்குகிறான். காணுமிடமெல்லாம் வறுமையும் வெறுமையும், காண்பவரெல்லாம் பசியும் பிணியும் என தெற்கு சூடான் கெவின் கார்ட்டரை நிம்மதியிழக்கச் செய்கிறது.


23-03-1993 அன்று ’தி நியூ யார்க் டைம்ஸ்’-இல் ’ஸ்ட்ரக்லிங் கேர்ள்’ என்ற அடைமொழியோடு ஒரு புகைப்படம் வெளியாகிறது. அதனைப் பார்த்து ஒட்டுமொத்த உலகமும் வாய்மூடியழுதும் வாய்விட்டுக் கதறியும் வருந்துகிறது. புகைப்படம் சொல்லும் கதை இதுதான். உணவைத்தேடி தவழ்ந்தபடி செல்லும் ஒரு குழந்தை… அந்தக் குழந்தை கருகரு நிறத்தில் நிலத்தில் சோர்ந்துபோய் கிடக்க, அதற்குப்பின்னே சில அடிகள் அருகாமையில் கழுகு ஒன்று அக்குழந்தையை இரையாக எண்ணியபடி இந்த நொடியோ அடுத்த நொடியோ கொத்தித்திங்க காத்திருக்கிறது. இப்புகைப்படத்தை எடுத்தது கெவின் கார்ட்டர் என்ற முப்பத்திரண்டு வயது இளைஞன். புகைப்படம் வெளியான நாளிலிருந்து ’தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை அலுவலகத்திற்கு ஓயாமல் போன்கள் வந்தபடி இருக்கிறது. போன் செய்தவர்கள் அனைவரும் கேட்கின்ற கேள்வி, குழந்தை இன்னும் உயிரோடு இருக்கின்றதா.. அல்லது கழுகு கொத்தித் தின்றுவிட்டதா.. என்பது மட்டும்தான். சில பத்திரிகைகள், ’அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட நேரத்திற்காகக் காத்திருந்த புகைப்படக் கலைஞர் அந்தக் குழந்தையைக் காப்பாற்றியிருக்கலாம்’ என்றும் எழுதி அப்புகைப்பட கலைஞனை கடுமையாக விமர்ச்சித்தன.


கெவின் கார்ட்டரின் நண்பர்களும் அதே கேள்வியையே கெவினிடம் கேட்டுக் குடைந்தனர். சிறுவயதிலிருந்தே பல அடக்குமுறைகளைப் பார்த்து வளர்ந்த கெவினுக்கு சொல்லொண்ணா துயரத்தைத் தந்தன நண்பர்களின் கேள்விகளும் தி நியூ யார்க் டைம்ஸ்-க்கு வந்த தொலைபேசி உரையாடல்களும். இதற்கிடையில் புகைப்படத்திற்கான உயரிய விருதான புலிட்சர் விருது அவ்வாண்டு கெவின் கார்ட்டருக்கு அறிவிக்கப்படுகிறது. எந்தப் புகைப்படத்தை எடுத்து நண்பர்களிடமும் உலகத்திடமும் கெட்ட பெயர் ஏற்பட்டதோ அந்தப் புகைப்படத்திற்கு உலகின்  உயரிய விருது.


1994-ஏப்ரலில் கொலம்பியா யூனிவர்சிட்டியில் நடைபெற்ற விழாவில் புலிட்சர் விருதைப் பெற்றுக்கொண்டு ஊர்திரும்பும் கெவின் கார்ட்டருக்கு மனதளவில் வலிகள் பெருகியபடி இருந்திருக்கிறது. இதற்கிடையில் விருது விழாவுக்கு  சில நாள்களுக்கு முன்னர் கெவினின் உயிர் நண்பன் ’கென்’ ஒரு கலவரத்தைப் படம்பிடிக்கச் சென்ற இடத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்து போகிறார். கென்னின் மறைவு கெவினை மேலும் பாதிக்கிறது. கென்னின் மனைவியைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். ஆனாலும் கெவினுக்கே ஆறுதல் தேவைப்படுகிறது. கூடவே வறுமையும் சேர்ந்துகொண்டு வாட்ட, சரியாக விருது பெற்ற மூன்றாவது மாதத்தில் கார்பன் மோனாக்ஸைடை எடுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்,


வறுமை, பசியில் வாடும் குழந்தைகளுக்கு  தன்னால் உதவமுடியாமை..  வீட்டு வாடகைக்குக் கூட பணம் இல்லாமை என பணத்தால் ஏற்பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதே சமயம், அவரின் வேலையின் பொருட்டு, அவர் பார்க்கக்கூடிய இடங்களான போலீஸ்.. வறுமையினால் குற்றச்சாட்டப்பட்ட மனிதர்கள் எனத் துயரங்கள் நிறைந்த இடங்களிலேயே சுற்றிச் சுழலக்கூடிய மனிதனாக இருந்த கெவின் கார்ட்டர் எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடியவராகவும் இருந்துள்ளார்.


நா.முத்துக்குமார், குற்ற உணர்ச்சியால் தூண்டப்பட்டவனின் மனநிலையை மிகச்சிறப்பாக எடுத்தாண்டுருக்கிறார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞனின் மனநிலைக்கு ஒத்துப்போவதாக அமைந்துள்ளது நா. முத்துக்குமாரின் வரிகள்.


’ஸ்ட்ரக்கிலிங் கேர்ள்’ என்ற மரணத்தருவாயில் இருக்கக்கூடிய ஒரு குழந்தையைக் காப்பாற்றாமல் அதனைப் புகைப்படமாக எடுத்துவிட்டேன். மனம் கனக்கிறது. மருந்திடவேண்டும் என இறைவனிடம் அவன் மன்றாடியிருந்தால் இப்படிதான் இருந்திருக்கும்.

 

”உறக்கமில்லை இரக்கம் காட்டு


இல்லை என் வலிகளை ஆற்று


தவறு செய்தேன் தவறி செய்தேன்


கருணையாளன் நீதான் அல்லாஹ்..”


என்றும்.


”நஞ்சினைப்போல நெஞ்சுக்குள் இருக்கும்


குற்றம் கொல்கிறதே


என் தொண்டைக்குழியில் உறுத்தும் முள்


ஏதோ சொல்கிறதே..”


என்று தூண்டிலில் மாட்டிய மீனாக குற்ற உணர்ச்சியில்  மாட்டிக்கொண்டு தவித்திருப்பார் கெவின் கார்ட்டர்.


கழுகு கொத்தப்போகும் நிமிடத்திற்காக காத்திருந்து பார்த்திருந்துவிட்டு எடுத்த புகைப்படத்திற்கு உயரிய விருது கிடைத்திருந்தாலும். அது எவ்வளவு ஒரு கொடிய கணம் என்பது பிற்பாடு உணர்ந்திருக்கிறார், கெவின் கார்ட்டர். இந்தச் செய்தியை நா.முத்துக்குமார் அண்ணனும் கடந்துபோயிருப்பார். அதனால்தான் இப்படியொரு வரியை எழுத முடிந்திருக்கிறது.


“ பெரும் கழுகு கொத்தும் பிணமாக


கிடந்தேன் யா அல்லாஹ்..” என்றும்,


”நடுங்குகின்ற விரல்களைப் பிடித்து


கருணையுடன் வெப்பத்தைக் கடத்து


உனது அடிமை எங்கு போவேன்.. என்று மனமுருகி மன்றாடி எழுதியிருக்கிறார்.


”காயங்களைக் கட்டிக்கொண்டு


உன்னிடம் வந்து விட்டேன்..


என் பாவம் யாவும் தூயவனே


எங்கோ மறந்துவிட்டேன்..”

 

Ad


என்று கெஞ்சி கெதமாறி அழுதாலும் அந்தப் புகைப்படம் எடுத்த குற்ற உணர்விலிருந்து வெளியேற முடியாமல் கடைசியில் தனது வண்டியிலிருந்து வெளியேறும் கார்பன் மோனாக்ஸைடை உள்ளிழுத்து தனக்கு விருப்பமான இசையை வழியவிட்டு தனது தற்கொலையை நடத்தி முடித்திருக்கிறார் கெவின் கார்ட்டர்.


மனிதர்களின் அன்பை பெறவே மன்றாட வேண்டியிருக்கிறது. இதில் கடவுளின் அன்பை பெறவேண்டுமானால் தற்கொலைதான் செய்ய வேண்டியிருக்குமோ.. எல்லா மனிதர்களுக்குள்ளும் குற்ற உணர்ச்சிகள் இருக்கத்தான் செய்கிறது. கவிஞர்களும் மனிதர்கள்தானே.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திகட்டாத நா.முத்துக்குமார் கவிதைகள் - 'திகட்டத் திகட்ட' பாடல் வைரல்

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

na muthukumar lyrics Thikatta Thikatta Kadhalippom lyric video from Aneethi movie viral on youtube

 

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்டு படம் இயக்கி வருபவர் வசந்தபாலன். அந்த வகையில் 'ஜெயில்' படத்தைத் தொடர்ந்து அர்ஜுன் தாஸை கதாநாயகனாக வைத்து 'அநீதி' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் வசந்தபாலன் தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள 'அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் வசந்தபாலன் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். வசந்தபாலனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

 

ad

 

இந்நிலையில் 'அநீதி' படத்தின் முதல் பாடலான 'திகட்டத் திகட்டக் காதலிப்போம்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இரண்டு லட்சம் பார்வையாளர்களைக் கடந்து யூ ட்யூப் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. இப்பாடலின் வரிகள் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் கவிதைகளிலிருந்து தொகுத்துள்ளார்கள். இதனை இயக்குநர் வசந்தபாலன் நா.முத்துக்குமாரின் நட்பின் நினைவாக உருவாக்கியுள்ளார். மெலடி காதல் பாடலாக வெளியாகியுள்ள இந்தப் பாடல் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  

 

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்  நா.முத்துக்குமார். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை இரண்டு முறை வாங்கியுள்ளார். இவரது பாடல் வரிகள் மற்றும் கவிதைகள் இளைஞர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது. 

 

 

 

 

Next Story

"அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது" - யுவன் உருக்கம்

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

yuvan shankar raja talk about na muthukumar

 

கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா அடுத்ததாக 'தீனா', 'துள்ளுவதோ இளமை', 'மௌனம் பேசியதே' உள்ளிட்ட படங்கள் தொடங்கி 'மாநாடு', 'வலிமை' படம் வரை தனது நீண்ட இசை பயணத்தில் நீங்கா முத்திரையைப் பதித்துள்ளார். காதல், சோகம், இன்பம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் தனது இசை மூலம் ஈடு செய்துள்ளார். சினிமா  வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து, ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். 

 

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த யுவன் சங்கர் ராஜா, 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தன்னுடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் என தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அப்போது மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குறித்து யுவன் கூறுகையில், "அவரின் இழப்பு மறக்க முடியாத ஒன்று. நா.முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரும் நானும் இணைந்து அதிக படங்களில் பணியாற்றியிருக்கோம். நாங்க ஸ்டூடியோவில் கம்போஸ் பண்ணிட்டு இருக்கும் போதே இதோ வந்தரண்ணான்னு சொல்லிட்டு உடனே போய் பாடல் எழுதிட்டு வந்து கொடுத்து அங்கேயே ரெக்கார்ட் பண்ண பாடல்களும் அதிகம் இருக்கு. அதுல நிறைய பாட்டு ஹிட்டாயிருக்குன்னு" தெரிவித்தார்.