Skip to main content

"அதுதான் எனக்கு ரொம்ப பயம் கொடுக்குது" - மிஷ்கினிடம் மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின் 

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

mysskin talk about tn cm mk stalin

 

'பிசாசு', 'துப்பறிவாளன்', 'சைக்கோ' உள்ளிட்ட பல வித்தியாசமான வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை இயக்குநர் மிஷ்கின் பிடித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். 

 

இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், "பிறந்தநாளன்று முதல்வருக்கு பூங்கொத்து குடுக்க முடியுமா?' என்று சகோதரி கிருத்திகா உதயநிதியிடம் கேட்டேன். பத்து நிமிடங்களுக்குள் மூன்று பேர்கள் என்னை அழைத்தார்கள். 'ஐயா இன்று முழுவதும் அலுவல்களில் இருக்கிறார், நாளை மதியம் சந்திக்கிறீங்களா?' எனக் கேட்டார்கள். 'அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். ஒரு வாரத்திற்குப் பிறகு எனக்கு இரண்டு நிமிடங்களை ஒதுக்கித் தாருங்கள்' எனக் கேட்டுகொண்டேன். இன்று எனக்கு அழைப்பு வந்தது. 'மாலை ஆறரை மணிக்கு வாருங்கள். மலர்கள் கொடுக்க வேண்டாம், புத்தகங்களைக் கொடுங்கள்' என்ற அன்பான உத்தரவுடன் அழைத்தார்கள். 20 தமிழ்ப்புத்தகங்களை வாங்கி முதல்வர் வீட்டிற்குச் சென்றேன். ஒவ்வொரு படிக்கட்டிலும் அவரை நேசிக்கின்ற மனிதர்கள். ஒருவர் ஒரு கதவைத் திறந்து 'உள்ளே உட்காருங்க' என வேண்டிக் கொண்டார். அது முதல்வரின் அறை. அமைதி குடிகொண்டிருந்தது.

 

என் கதாநாயகன், தமிழகத்தின் விடிவெள்ளி உதயநிதி ஓடி வந்து கட்டி அணைத்தான். பாலுள்ளம் கொண்ட என் தம்பியை அணைத்துக் கொண்டேன். ஒரு அறையைத் திறந்து 'அண்ணனுக்கு ஒரு காபி சொல்லுங்க' என்று சொல்ல, இரண்டு நிமிடங்களில் காபி வர, நான் உதய்யின் கண்களைப் பார்த்து 'என்ன உதய் கண்ணெல்லாம் வீங்கியிருக்கு? தூங்கலையா?' எனக் கேட்க, 'தூங்க டைம் இல்ல சார்' என்று சொல்லி நான் ரசிக்கும் அழகு புன்னகையை உதிர்க்க... 'அப்பா கூப்டுறார்' என ஒருவர் வந்து சொல்ல, நாங்கள் உள்ளே சென்றோம். இந்த மாநிலத்தின் தந்தையைப் பார்த்தேன். 'நல்லாருக்கிங்களா மிஷ்கின்?' என்று என்னைக் கட்டி அணைத்தார். இங்கு உட்காருங்கள் என வலதுபுறம் சோபாவைக் காட்ட, அந்தக் கைகளை முத்தமிட்டு அமர்ந்தேன். புன்னகையுடன் 'எங்க ஆட்சி எப்படி இருக்கு மிஷ்கின்?' எனக் கேட்க… அதிர்ந்து போனேன். 'இதுவரை திராவிடத்தில் இவ்வளவு அமைதி நிலவியதில்லை. ஊரே உங்களைக் கொண்டாடுகிறது. ஏன், எதிர்க்கட்சிக்காரர்கள் கூட உங்களை வணங்குகிறார்கள். மக்கள் அனைவரும் உங்களை மனதார போற்றுகிறார்கள்' என்று சொன்னேன். அதற்கு அவர் 'அந்த நம்பிக்கைதான் எனக்கு ரொம்ப பயம் கொடுக்குது. தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் நான் என்ன நல்லது செய்ய போறேன், எப்படிச் செய்ய போறேன் என நான் யோசித்துக் கொண்டே இருக்கிறேன்' என்று அவர் ஒரு குழந்தை போல் சொல்ல, என் கண்கள் பனித்தன. அதற்கு மேல் வார்த்தை வராமல், கையெடுத்துக் கும்பிட்டு வெளியே வந்தேன். என் தம்பி ஆதித்யா காரை ஸ்டார்ட் செய்ய, நான் கதவைத் திறந்து உள்ளே ஏறும் முன், 'இந்த மனுஷன் 100 வருஷம் நல்லா வாழனும்' என்று இயற்கையை வேண்டி கதவைச் சாத்த, அந்த கார் மெதுவாக நகர்ந்தது. அந்த மாலை மிகவும் அழகாக இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mysskin (@directormysskin)

 

 

சார்ந்த செய்திகள்