/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/184_2.jpg)
மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கடைசி விவசாயி திரைப்படம் நல்லவிமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில், கடைசி விவசாயி படத்தை திரையரங்கில் பார்த்த இயக்குநர் மிஷ்கின், படத்தையும் இயக்குநர் மணிகண்டனையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
படம் முடிந்த கையோடு வெளியே வந்த இயக்குநர் மிஷ்கின், காரில் சென்றவாறே படம் குறித்து பேசியுள்ள காணொளியில், "கடைசி விவசாயி படம் பார்த்தேன். படத்தின் இடைவேளையில் நான் விழுந்து விழுந்து அழுதிருக்க வேண்டும். ஆனால், ஒரு சில கண்ணீர் துளிகளோடு அமைதியாக அமர்ந்திருந்தேன். என்னுடைய மகளை இந்தப் படம் பார்க்கச் சொல்வேன். படம் கொஞ்சம் மெதுவாக போகிறது என்று திரையரங்கைவிட்டு வெளியே வரும்போது சிலர் சொன்னார்கள். அவசர கதியாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையை மெதுவாக வாழவேண்டும் என்று இந்தப் படம் சொல்கிறது. சொந்தமாக 20 சென்ட் நிலம்கூட இல்லாத குடும்பத்தில்தான் நான் பிறந்தேன். என் தந்தை விவசாயியாக இல்லையே என்று நினைத்து இன்று வருந்துகிறேன்.
இந்தப் படம் மிகவும் எளிமையான வலிமையான படம். சமூகத்திற்கு பயன்படக்கூடிய படமாகவும் நம்முடைய ஆன்மாவை சுத்தப்படுத்தக்கூடிய படமாகவும் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்து இந்தப் படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார். கடந்த 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த படங்களில் ஒன்று கடைசி விவசாயி. குடும்பத்துடன் சென்று இந்தப் படத்தை பார்க்க வேண்டும். இந்தப் படத்தில் நடித்த முதியவர், இன்றும் நடித்துக்கொண்டிருக்கிற ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் மாதிரிதான் எனக்கு தெரிந்தார். இந்தப் படத்தில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்திருந்தால் 20 ஆஸ்கர் விருது கொடுத்திருப்பார்கள். படத்தை பார்த்தவுடன் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் காரிலியே விமர்சனம் செய்துகொண்டு இருக்கிறேன். இந்தப் படத்தை நாம் பாராட்டவில்லை என்றால் நமக்குள் எந்தவிதமான ஆத்மீக உணர்வும் இல்லை என்று அர்த்தம்.
படத்தின் ஒவ்வொரு ஷாட்டையும் இயக்குநர் அழகாக வடிவமைத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பையும், ஆன்மாவையும் கொடுத்த தம்பி விஜய் சேதுபதிக்கு என்னுடைய பாராட்டுகள். இந்தப் படத்தை பார்த்துவிட்டு எங்கள் பொறுமையை சோதிக்கிறது என்று ஒருவர் கூறினால் அவர் தன்னுடைய தாய், தந்தையை உற்றுப்பார்க்காதவர், யானையையும் நாய் குட்டியையும் உற்றுப்பார்க்காதவர். இயக்குநர் ஷங்கருக்கு நான் ஒரு விழா எடுத்தேன். மணிரத்னம், பாரதிராஜாவுக்கும் விழா எடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால், உனக்குத்தான் மணிகண்டன் நான் விழா எடுக்க வேண்டும். என்னுடைய அடுத்த விழாவின் கதாநாயகன் நீதான். அதற்கு முன்பு அனைத்து இயக்குநர்களும் இந்தப் படத்தை பார்த்துவிட்டு ஒரு பெரிய பேட்டி கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)