மிஷ்கின் தற்போது இயக்கம் நடிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இயக்கத்தை விட நடிப்பில் அதிக ஆர்வம் காட்டுகிறார். இயக்குநராக ட்ரெயின் படத்தை இயக்கி வருகிறார். ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இதுபோக பிசாசு படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் சில காரணங்களால் அனைத்து பணிகளும் முடிந்து இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. நடிகராக பார்க்கையில் கடைசியாக விஷ்ணு விஷால் சகோதரர் ஹீரோவாக அறிமுகமான ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தில் தோன்றியிருந்தார். இப்போது கீர்த்தி சுரேஷுடன் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் மிஷ்கின் வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களை அவர் சந்தித்த நிலையில் அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். விஜய் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு, “நான் சினிமாக்காரன். அரசியலை பற்றி இதுவரை நான் வெளிப்படையா சொன்னதில்லை. விஜய் சினிமாவில் இருந்த வரை அன்பாக அழைத்தேன். ஆனால் இப்போது அரசியலுக்கு போய்விட்டார். எனக்கும் அவருக்குமான உறவு வித்தியாசமாகிவிட்டது. அதனால் அரசியல் கருத்துகள் நான் சொல்ல மாட்டேன். அவரை நான் பார்த்த வரையில் கடுமையான உழைப்பாளி. ரொம்ப நல்ல மனிதர். இதுதான் எனக்கு தெரியும். இதை அரசியலோடு ஒற்றிபார்க்க வேண்டாம்” என்றார்.
தெருநாய்கள் தொடர்பான கேள்விக்கு, “நாங்க வளரும் போது கிராமங்களில் தெருவுக்கு ஒரு ஆண் நாய், ஒரு பெண் நாய் இருக்கும், அது எங்களை பத்திரமா பாத்துக்கும். மனிதர்களுக்கு எப்படி நாம் கர்ப்பத்தடை பண்ணினோமோ, நாய்களுக்கு பண்ணியிருக்க வேண்டும். அப்படி பண்ணாததால் அது அதிகரித்துவிட்டது. மனிதர்களையும் குழந்தைகளும் துன்புறுத்தி கடிக்குது. இதனால் நிறைய இழப்புகளும் இருக்கு. ரெண்டு பக்கமும் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய தத்துவத்தில் உயிர்வதை ரொம்ப கொடுமையானது. பாதிப்பு அதிகமாக வருவதால் அதை கட்டுபடுத்துவதில் தப்பில்லை.
திடீரென ஒரு முடிவுகள் எடுக்கும் போது நிறைய சச்சரவுகள் இருக்கும். நிறைய தர்மங்களை மீறுவது போல் இருக்கும். அதனால் அது தொடர்பாக நிறைய படித்தவர்கள், ரெண்டு பக்கமும் பேசி நல்ல தீர்வை எடுக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இரண்டு பக்கமும் நியாங்களும் தர்மங்களும் இருக்கிறது. எனக்கும் நாய்களை அவ்ளோ பிடிக்கும். அதை பைரவர் என்ற தெய்வமாகவும் வழிபடுகிறோம். அதே நேரம் அந்த நாய் ஒரு குழந்தையை கடித்து விபத்துகளை ஏற்படுத்துவதால் அதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு சின்ன பிரச்சனை வந்தால் அதை அரசியலாக பிரித்து பேசிக்கிட்டு இருக்கிறோம். அப்படி நாம் பேசக்கூடாது. இரண்டு பக்கமும் அறிஞர்களால் உட்கார்ந்து உண்மையாக எது நல்லது எது கெட்டது என ஆராய வேண்டும். இந்த பிரச்சனையை ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்க வேண்டும் என எனக்கு தெரியவில்லை” என்றார்.