வெற்றிமாறன் தயாரிப்பில், அவரது உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. இபப்டத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீ.ஜே.அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமித் திரிவேதி இசையமைத்துள்ள இப்படத்தை பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வெற்றிமாறனோடு இணைந்து வழங்குகிறார். இப்படதின் டீசர் கடந்த ஜனவரியில் வெளியானது. இதில் குறிப்பிட்ட சமூக பெண்களின் வாழ்க்கையைத் தவறாக சித்தரித்துள்ளதாக சில விமர்சனங்கள் எழுந்தது. இப்படம் பல்வேறு சிக்கல்களை கடந்து வரும் 5ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினருடன் மிஷ்கினும் கலந்து கொண்டார்.
நிகழ்வில் மிஷ்கின் பேசுகையில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். அப்போது இப்பட இயக்குநர் வர்ஷா பரத் பற்றி பேசுகையில், “எப்போதுமே பெண்கள் சினிமாவுக்குள் வந்தால் சந்தோஷமாக இருக்கும். ஏனென்றால் ஆண்களால் அழுத்தப்பட்ட இந்த சினிமாவில் ஒரு பெண் வருவது வரவேற்கத்தக்கது. வர்ஷாவை வெற்றிமாறன் முதன்முதலில் என்னிடம் அறிமுகப்படுத்திய போது, இரண்டு புத்தகங்களை கொடுத்தேன். வெற்றிமாறன் பட்டறையில் தீட்டப்பட்ட கத்தி அவள்.
நேற்றிரவு படம் பார்த்தேன். இதை ஒரு சிறந்த படம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நிறைய நல்ல தருணங்கள் இருக்கிறது. படம் பார்த்துவிட்டு யாரும் வர்ஷாவை திட்டாதீங்க. என் படங்களை திட்டுங்க. ஏனென்றால் நாங்கள் வளர்ந்துவிட்டோம். ஆனால் அவள் ஒரு குழந்தை, ஒரு வேளை தமிழில், இந்தியாவில் முதல் ஆஸ்கரை அவள் வாங்கலாம். அடுத்து நேஷ்னல் அவார்டும் வாங்கலாம். முதல் கதை என்பது முதல் குழந்தை மாதிரி. அது பெரும்பாலும் சவலக் குழந்தைகளாத்தான் இருக்கும். ஆனால் வர்ஷா என்ற தாய், தன்னுடைய முதல் குழந்தை எந்த மாதிரி இருக்க வேண்டு என தெரிந்து குழந்தையை பெற்றிருக்கிறாள். சமூகத்தை வருடிக் கொடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க அவள் வரவில்லை. தன்னுடைய முதல் வயது முதல் முப்பத்தி இரண்டு வயது வரை என்ன நடந்தது என அப்படியே எடுத்திருக்கிறாள்.
இந்த உலகில் எவ்வளவு மோசமாக படங்களை நாம் பார்க்கிறோம். அந்த படங்களை நம் மனைவி, குழந்தைகளை கூட்டிக் கொண்டு பார்க்க முடியுமா. அதில் அவ்வளவு விரசம் இருக்கிறது. இந்த படத்திலும் விரசம் இருக்கிறது. ஆனால் தெய்வீகத்தன்மையாக இருக்கிறது. நிறைய சாக்கடை இருக்கும் படங்களில் இந்த படம் ஒரு சந்தனக்கட்டை” என்றார்.