
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை '800' என்ற தலைப்பில் படமாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகியிருந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
இதையடுத்து முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ஆஸ்கர் வென்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல் நடிக்கிறார். மேலும் மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முத்தையா முரளிதரன், "வெங்கட் பிரபு, ஸ்ரீபதி, ஆக்டர் சுகு என்னை சந்திச்சாங்க. எனக்கு ஒரு மன்றம் இருந்துச்சு. 1988-ல் அதை அமைச்சோம். இந்த மன்றம் மூலம் சுனாமி சமயத்தில் 1000 வீடுகள் கட்டிக் கொடுத்தோம். அதோடு 10,000 குழந்தைகளை இப்பவும் படிக்க வச்சிக்கிட்டு இருக்கோம். மக்களுக்கு தேவையான உதவிகளை செஞ்சிட்டு இருக்கோம். யுத்தம் நடந்த சமயத்தில் அதில் பாதிக்கப்பட்டவங்க இருந்தாங்க. அப்போது அவுங்க மூனு பேரும் பாதிக்கப்பட்டவங்களுக்கு என்ன செய்ய முடியும் என மன்றம் மூலமாக வந்தாங்க.
என்னுடைய மனைவியின் வீட்டுக்கிட்ட தான் வெங்கட் பிரபுவும் இருக்காங்க. ஆர்.ஏ.புரத்தில். மனைவியுடன் சின்ன வயசு நண்பராக இயக்குநர் வெங்கட் பிரபு பழக்கம். அதனால் அந்த மூனு பேர் எங்க வீட்டில் லன்ச் சாப்பிட வந்தாங்க. அப்போது வெங்கட் பிரபுவிடம் என்னுடைய கோப்பைகளை காட்டினவுடன், அந்த நேரத்தில் தான் அவர், உங்களை பத்தி ஒரு பயோ-பிக் எடுக்கலாமேன்னு சொன்னார். மேனேஜரும் படம் எடுத்து அதன் மூலம் வருகிற வருவாயை வைத்து பல உதவிகளை செய்யலாம். அதனால் ஒத்துக்கோங்க என சொன்னார். அதனால் ஒத்துக்கிட்டேன். இப்படம் எடுக்க நிறைய தடங்கல் ஏற்பட்டுச்சு. எல்லாருக்கும் தெரியும் விஜய் சேதுபதி நடிக்க இருந்தது. அதுலயும் ஒரு தடங்கல் ஏற்பட்டுச்சு. பிறகு கோவிட் வந்துடுச்சு. ஸ்ரீபதியின் விடாமுயற்சியால் தான் இந்த படம் இப்போ இங்க வந்திருக்கு." என்றார்.