
‘பாட்டுக் கதை' தொடரில் பாடலாசிரியர் முத்தமிழ் அவர்கள் தன்னுடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
நம்முடைய மண் சார்ந்த இசையில் வார்த்தைகளை நம்மால் இயல்பாக கோர்க்க முடியும். இது எளிதானதும் கூட. ஷான் ரோல்டனுடன் நான் பணியாற்றும்போது அதுபோன்ற வாய்ப்புகள் எனக்கு நிறைய கிடைக்கும். அவருடைய இசை இந்திய இசையாக இருக்கும். நாட்டுப்புற இசை எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருந்தாலும், படத்துக்கு என்ன தேவையோ அதையே நான் பாடலாக எழுதுகிறேன். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அனைவருடைய சிந்தனையும் தேவையும் இதில் முக்கியம்.
'வா மச்சானே' பாடலுக்கு இடையில் அந்த மக்களின் வாழ்க்கை நிலையை இரு வரிகளில் சொல்ல முடிந்தது. இதுபோன்ற சில தருணங்களில் மட்டும் தான் நாம் விரும்புவதை எழுதும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும். நம்மால் முடிந்தவரை நாம் நினைத்ததை எழுதுகிறோம். கவிஞர்களுக்கு ஆழ்ந்த வாசிப்பு பழக்கம் இருப்பது நிச்சயம் உதவும். இப்போது நிறைய பேர் குழந்தைகளுக்கு பிடித்தது போல் பாடல் எழுதச் சொல்கிறார்கள். குழந்தைகள் உடனே திரும்பிப் பார்க்கும்படி எழுத வேண்டும் என்கிறார்கள்.
சில நேரங்களில் நமக்கே நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்கிற எண்ணம் வரும். அனைவரும் கவனிக்க வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக இருப்பதால், இப்போது வரிகளை விட இசை அதிக ஆக்கிரமிப்பு செய்கிறது. முதல் இரண்டு வரிகள் தான் முக்கியம் என்று இப்போது பலரும் நினைக்கின்றனர். அதை வைத்து தான் நம்மைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதன்பிறகு நாம் என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம். வரிகளின் தேவை இப்போது பெருமளவு குறைந்து வருகிறது.
இதனால் பல்வேறு சமயங்களில் நெருடல் ஏற்படும். முடிந்தவரை நல்ல விஷயங்களை பாடல்களில் வைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறோம். கவனிக்கும்படி பாடல் எழுத வேண்டும் என்பதுதான் எங்களுக்குள் விதைக்கப்படுகிறது. சில படங்களில் நான் பாடல்களும் பாடியிருக்கிறேன். ஒரு படத்துக்கு இசையமைத்தும் இருக்கிறேன். சினிமாவில் அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதும் அந்த ஆசைகளில் ஒன்று.