சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50’ என்ற பாராட்டு விழா இன்று (13.09.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு இளையராஜாவுக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து இளையராஜா பேசுகையில், “இதுவரை தோன்றிய கம்போசர்கள், இசையமைப்பாளர்கள், இந்தியாவிலே தோன்றிய இசையமைப்பாளர்கள் உலக அனைத்திலும் தோன்றிய மாமேதைகள் யாருக்கும் அரசு பாராட்டு விழா நடத்தியதில்லை. இசை உலக சரித்திரத்திலேயே முதல் முறையாக ஒரு இசையமைப்பாளனுக்குப் பாராட்டு விழா நடத்துவது தமிழக அரசு தான். 

Advertisment

நான் சிம்பனிக்கு அடுத்த நாள் போகிறேன் என்றால் முதல் நாளே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வந்திருந்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தார். அதேபோல் லண்டனிலே இசை அரங்கேற்றம் செய்துவிட்டு அடுத்த நாள் ஃபிளைட்டில் நான் திரும்பி வருகிறேன். அவ்வாறு திரும்பி வரும் போது அரசு மரியாதையுடன் என்னை வரவேற்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள் என்று எனக்குச் செய்தி வந்தது. என்னால் நம்ப முடியவில்லை. இங்கே வந்து பார்த்தால் அமைச்சர் தங்கம் தென்னரசு கையில் மலர் செண்டுடன் காத்திருக்கிறார். அரசு மரியாதையுடன் உங்களை வரவேற்க வேண்டும் என்று முதல்வர் ஆணையிட்டிருக்கிறார் என்று சொல்லி என்னை வரவேற்கிறார்கள். 

என்னவென்று சொல்வது. வழியனுப்பி வைத்துவிட்டு வரவேற்கவும் செய்து இன்று பாராட்டு விழாவும் நடத்துகிறார்கள் என்னால் நம்பவே முடியவில்லை. இந்த மேடையில் நான் நிற்கிறேனா?. நான் பேசுகிறேனா?. அப்படி என்பது தெரியவில்லை. என் மேல் அவ்வளவு அன்பு வைப்பதற்கு என்ன காரணம். இந்த இசை தானா?. என் மேல் அவ்வளவு அப்பா (கலைஞர்) வைத்த அன்பு, இசைஞானி என்பதே எனக்குப் பெயராகிவிட்டது” எனப் பேசினார். இவ்விழாவில் நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,மு.பெ. சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த், முக்கிய பிரமுகர்கள், திரைப்படத் துறையை சார்ந்த கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.