பிரபல இசையமைப்பாளர் தேவாவின் 75-வது பிறந்தநாளையொட்டி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அவரது இசைக்கச்சேரி கடந்த நவம்பர் 20-ஆம் தேதி அன்று மாலை 06.30 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதேபோல், இசையமைப்பாளர்கள் அனிருத், ஸ்ரீகாந்த் தேவா, நடிகைகள் மீனா, மாளவிகா, நடிகர்கள் ஜெய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தேவா இசையமைத்த பல பாடல்கள் தனக்கு வெற்றியைப் பெற்று தந்ததாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன், இசையமைப்பாளர் தேவாவின் 'தஞ்சாவூருமண்ணு எடுத்து' என்ற பொற்காலம் படத்தின் பாடல் தனக்கு பிடிக்கும். அதை எனது இறுதிச்சடங்கில் ஒலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதைத்தனது உயிலிலும் எழுதி வைத்தார்.
அதன்படியே, சிங்கப்பூர் முன்னாள் அதிபர் இறுதிச்சடங்கில் 'தஞ்சாவூருமண்ணு எடுத்து' பாடல் பல நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் ஒலிக்கப்பட்டது. இதனை நடிகர் ரஜினிகாந்த் மேடையில் நினைவுகூர்ந்தார். இதனிடையே, சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் இறுதிச்சடங்கில்அப்பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.