ADVERTISEMENT

“நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம்...” -தயாரிப்பாளர் முரளி

03:37 PM Nov 23, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கினார்.

இந்த தேர்தலில் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். இன்றைய தேர்தலில் 1303 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 1050 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். கமல்ஹாசன், எஸ்.வி.சேகர், டி.ராஜேந்தர், சமுத்திரக்கனி, சிவகார்த்திகேயன், குஷ்பு, பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட திரையுலக முக்கிய பிரமுகர்களும் நேற்று ஓட்டுப்போட்டனர்.

இதற்கு முன்பு நடைபெற்றுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில் வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தேர்தலில் நேற்று பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலையிலிருந்து எண்ணப்பட்ட ஓட்டுகளில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி வெற்றிபெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட டி.ராஜேந்தரை விட 220 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிபெற்றுள்ளார் முரளி.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முரளி பேசுகையில், “ஓட்டுப் போட்ட அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1,050 வாக்குகளைப் பதிவு செய்து மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கி இருக்கிறார்கள். சங்கத்தில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்று நம்பி வாக்களித்துள்ளனர். இதில் எனக்கு 557 வாக்குகள் அளித்து என்னை வெற்றிபெற வைத்துள்ளனர்.

முதல் வேலையாகத் தேங்கிக் கிடக்கும் படங்களை வெளியிடும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். நிதி நிலைமையைப் பார்த்து நலத்திட்ட உதவிகளைத் தொடங்க வேண்டும். நிறைய தயாரிப்பாளர்கள் அதை எதிர்நோக்கியுள்ளனர். குறுகிய கால மற்றும் நெடுங்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

வி.பி.எஃப் கட்டணத்தைப் பொறுத்தவரையில் முழுமையாக விலக்கு கேட்கவுள்ளோம். நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம். அதன் பேச்சுவார்த்தையை உடனே தொடங்கவுள்ளோம். ஏனென்றால் நிறைய படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் முடிவுகளை அறிவிப்போம்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT