/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/B2_0.jpg)
பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் - அல் முராட் & சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை ரத்தன் லிங்கா எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர். 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலை பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர். 'லாக்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்தும், நடிகைக்கு அல்வா கொடுத்தது பற்றியும் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதில், “இத்தனைக்காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன பெரிய ரகசியம்? என்று கேட்டால், எந்த ஒரு விசேச காரணமும் இல்லை. எனது பாட்டி எங்களுக்கு உணவு பரிமாறும் போது எனக்கு முருங்கைக்காய் துண்டுகளை குறைவாகத்தான் போடுவார். உடன் சாப்பிடும் மாமாவுக்கு நிறைய போடுவார். இன்னும் ரெண்டு பீஸ் போடச் சொல்லி நான் கேட்பேன். இது உனக்குபோதும். இரண்டுக்கு மேல் வேண்டாம், இது போதும்என்பார் பாட்டி.
எப்போதும் வேண்டாம் என்பதில்தான் மனம் சுற்றிச் சுற்றி வரும். எங்கள் ஊரில் ஒரு பெரியவர் சின்னப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார். அவரிடம் இந்த சந்தேகத்தைக் கேட்டபோதுதான் அதன் அர்த்தம் புரிந்தது. அதை விளையாட்டாகத்தான் என் படத்தில் வைத்தேன். அப்போது அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், இவ்வளவு காலம் கடந்தும் முருங்கைக்காய் கதை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அது ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது .
லாக் படத்தின் கதாநாயகி மதுஸ்ரீ எடைக்குறைப்பு பற்றிபேசினார் .இப்படி சிரமப்பட்டு வெற்றி பெறுவதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. நான் சின்னவீடு படத்தில் கல்பனாவுக்கு தினசரி அல்வா கொடுத்தேன். ஏனென்றால், அவர் உடல் எடை கூட வேண்டும் என்பதற்காக.சிரமப்பட்டு உழைத்தால்தான் அதன் மதிப்பு நமக்குதெரியும். வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள்.” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)