'முருங்கைக்காய் சிப்ஸ்', 'சுட்ட கதை', 'நட்புனா என்னனு தெரியுமா' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். அதோடு சில படங்களை விநியோகமும் செய்திருக்கிறார். யூ-ட்யூப்பில் பல சேனல்களில் நேர்காணல் மூலம் தன் கருத்துக்களை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பின்பு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளருமான மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இவர் மீது மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அஜய் ஜெகதீஷ் மோசடி குற்றம் சாட்டினார். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத்தருவதாக கூறி இவரும் கேரளாவை சேர்ந்த ரோகன் என்பவரும் ரூ.5.24 கோடி பெற்றுள்ளதாக கூறும் அவர், பின்பு அவர்கள் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை என மும்பை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், முதலில் கேரளாவை சேர்ந்த ரோகனை கைது செய்தனர்.
இதையடுத்து தயாரிப்பாளர் ரவீந்தரை கைது செய்ய சென்னை வந்துள்ளனர். ஆனால் ரவீந்தர் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறியதால் சம்மன் மட்டும் வழங்கிவிட்டு சென்றுள்ளனர். ரவீந்தர் முன்னதாக திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ.16 கோடி மோசடி செய்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.