ஹன்சிகாவின் சகோதரரான பிரசாந்த் 2020ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை முஸ்கானை திருமணம் செய்தார். பின்பு 2022ஆம் ஆண்டு பிரிந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து பிரசாந்த், ஹன்சிகா மற்றும் அவரது தாயார் மீது முஸ்கான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், பிரசாந்த் தன் மீது வன்முறையில் ஈடுபட்டதாகவும் ஹன்சிகா மற்றும் அவரது தாயார் தன்னுடைய திருமண உறவில் தலையிட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் மூவரும் விலையுயர்ந்த பரிசுகள் மற்றும் பணத்தைக் கேட்பதாகவும் சொத்து சம்பந்தப்பட்ட மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார்.
முஸ்கானின் புகாரின் அடிப்படையில் மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் ஹன்சிகா, அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் தாயார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் இருந்து ஹன்சிகாவும் அவரது தாயாரும் கடந்த பிப்ரவரி மாதம் மும்பை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர். இதைத் தொடர்ந்து தாயும் மகளும் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மும்பை காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டது.
இதனிடையே ஹன்சிகா தன்மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி மும்பை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஹன்சிகா போலீஸ் விசாரணையை எதிர்கொள்ள உள்ளார். சமீபகாலமாக தனது கணவரை பிரிந்து ஹன்சிகா வாழ்ந்து வருவதாக ஒரு தகவல் இருக்கிறது. இந்த சூழலில் அவரது மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது அவரை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.