Advertisment

பாலியல் புகார்; எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை - கம்யூனிஸ்ட் கட்சி 

mukesh need not to resign mla post cpi announced regards hema committee report issue

மலையாளத் திரையுலகில் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் கொடுமை அரங்கேறியது. இந்த சம்பவத்தின் விளைவாக படப்பிடிப்பில் ஈடுபடும் நடிகைகள், பெண்கள் என அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது, இந்த குழுவின் ஆய்வறிக்கை அம்மாநில முதல்வரிடம் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வெளியாகாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

Advertisment

இந்த ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் நடிகை ஸ்ரீலேகா மித்ரா அளித்த புகாரில் இயக்குநர் ரஞ்சித் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில் ரஞ்சித் குற்றத்தை மறுத்து, தனது மலையாள சினிமா அகடாமி தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருந்தார். நடிகை ரேவதி சம்பத் நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான் ஆகியோர் மீது அளித்த புகாரில் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் இருவரும் குற்றத்தை மறுக்க, சித்திக் தனது நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார். நடிகை மினுமுனீர் அளித்த புகாரில் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு நடிகை புகார் கொடுத்ததால் அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பாலியல் புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்ததால் மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் மோகன்லால் உட்பட 17 செயற்குழு உறுப்பினர்கள் கூண்டோடு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்தனர். மேலும் அம்மா அமைப்பை கலைத்தனர்.

Advertisment

இந்த பாலியல் புகார்கள் தொடர்பாக அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் புகார் கூறிய நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகிறது. இதனிடையே தேசிய மகளிர் ஆணையம் ஒரு வாரத்திற்குள் ஹேமா கமிட்டி ஆய்வறிக்கையின் முழு வடிவத்தையும் வழங்கக் கோரி கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழுவில் நடிகை மினுமுனீர் அளித்த புகாரைத் தொடர்ந்து, நடிகர் மற்றும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. முகேஷ் கேரள அரசின் குழுவில் இருந்து முகேஷ் நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கோரியும் கேரள மாநில இளைஞர் காங்கிரசார் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் முகேஷ் வழக்கு தொடர்ந்த நிலையில் அவரை செப்டம்பர் 3ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

இதனிடையே முகேஷ் அவரது எம்.எல்.ஏ. பதவியை தொடரலாமா அல்லது ராஜினாமா செய்ய வேண்டுமா என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசித்து முகேஷ் தற்போது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் கோவிந்தன், “பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 16 எம்.பி.க்கள் மற்றும் 135 எம்.எல்.ஏ.க்கள் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை. எனவே, முகேஷ் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் திரைப்படம் தொடர்பான குழுவில் முகேஷ் இடம்பெறக் கூடாது. அவர் மீதான குற்றச்சாட்டுகளைக் கருத்தில் கொண்டு அதிலிருந்து நீக்கப்பட வேண்டும்” என்றார். முகேஷ் 2016ஆம் ஆண்டும் 2021ஆம் ஆண்டும் கேரள சட்டமன்றத் தேர்தலில் கொல்லம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

communist party mollywood actor Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe