இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பார்க்கிங் படத்திற்கு 3 விருது அறிவிக்கப்பட்டது.
மேலும் சிறந்த இசையைமைப்பாளருக்கான விருது ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆவணப்பட பிரிவில் லிட்​டில் விங்ஸ் படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சமீபத்தில் திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, 2023ஆம் ஆண்டிற்காக மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விருது வழங்கும் விழா குடியரசு மாளிகையில் நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விருது வென்ற கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். அதன்படி பார்க்கிங் படத்திற்காக சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பட தயாரிப்பாளர் கே.எஸ்.சினிஷ், சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ்.பாஸ்கர் வாங்கினார்கள். பின்பு வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜி.வி.பிரகாஷ், உள்ளொழுக்கு(மலையாளம்) படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை ஊர்வசி வாங்கினர். அதே போல் சிறந்த நடிகருக்கான விருதை ஜவான் படத்திற்காக ஷாருக்கான் மற்றும் 12த் ஃபெயில் படத்திற்காக விக்ராந்த் மாஸி ஆகிய இருவரும் வாங்கினர். இதையடுத்து தாதா சாகேப் பால்கே விருது மோகன்லால் வாங்கி உரையாற்றினார். அப்போது நெகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.