சின்னத்திரையில் பெரும் ஹிட்டடித்த ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியலை இயக்கியிருந்தவர் எஸ் என் சக்திவேல். பெரியத் திரையிலும் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ என்ற படம் மூலம் கால்பதித்தார். இதில் தீபக், மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில் 2015ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து 2018ல் வெளியான ‘காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ படத்தை இவர் பெயர் கொண்ட இன்னொரு ஒருவருடன் இணைந்து இயக்கியிருந்தார். பின்பு மீண்டும் சின்னத்திரைக்கு சென்று ‘பட்ஜெட் குடும்பம்’ என்ற தொடரையும் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் எஸ்.என் சக்திவேல் உடல் நலக்குறைவால் திடீரெனெ இன்று நள்ளிரவு 2 மணிக்கு மரணம் அடைந்தார். இவரது மறைவு சின்னத்திரை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் பணியாற்றிய கலைஞர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரில் பட்டாபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த எம்.எஸ். பாஸ்கர், “எஸ்.என்.சக்திவேல் எனக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய நண்பன் மற்றும் நலம் விரும்பி.
பட்டாபி என்ற கேரக்டர் மூலம் தமிழக மக்களிடையே எனக்கு பெயர் கிடைத்து, இந்தளவு நான் வளர்ச்சி அடைந்திருக்கிறேன் என்றால், அதற்கு சக்திவேல் சார் முக்கிய காரணம். நல்ல மனிதர். அவர் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருந்தது. அந்த போராட்டத்தினோடே இறைவனிடம் சென்று விட்டார்” என வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.