தமிழ்நாட்டில் தற்போது இரு சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று சிவகங்கை மடப்புரம் பத்தரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றி அஜித்குமார், தங்க நகை திருட்டு வழக்குத் தொடர்பாக விசாரணை என்ற பெயரில் காவலர்கள் நடத்திய கொடூர சித்ரவதை காரனமாக உயிரிழந்தது. இன்னொரு சம்பவம் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரிதன்யா என்ற புது மணப்பெண் மாமியார் வீட்டு குடும்பத்தினரால் மன ரீதியாகவும் கணவரால் உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்படுவதாக கூறி பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது.
இந்த இரு சம்பவங்கள் உட்பட பல சம்பவங்களை நினைவுப்படுத்தி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லாக்கப் கொலைகள். பழிக்குப்பழி கொலைகள். வரதட்சணை கொடுமை தற்கொலைகள். வயது பாராமல் மிருகத்தனமான பாலியல் குற்றங்கள். கொடூரமான கொள்ளை சம்பவங்கள். அஜித்குமார் என்ற காவலாளி இளைஞர் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்! உயர் அதிகாரிகள் உத்தரவிட்டார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் அடித்து கொல்பவர்களுக்கு மனதில் சிறிதாவது ஈவிரக்கம் வேண்டாமா? மிளகாய் பொடியை கரைத்து வாயில் ஊற்றுவதா? காரில் நகை இருந்ததற்கு ஆதாரம் என்ன? அப்படி இருந்தது என்றால் சாவியை ஏன் மற்றவர் கையில் கொடுக்க வேண்டும்? அவர் எடுத்ததை பார்த்தவர் யார்? ஏழைக்கு இதுதான் நீதியா? அவருக்கும் அந்த காரில் வந்த பெண்களுக்கும் என்ன விரோதம்?
பெனிக்ஸ், ஜெயராஜ் வழக்கில் தீர்ப்பு என்ன? ஶ்ரீமதி மரண விஷயம் என்னவாயிற்று? நண்பர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தீர்ப்பு என்ன? எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறலாமா? அரசுப் பதவியில் உள்ளவர்களால் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா? குற்றம் செய்தவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்படுமா? இப்படி அனைவர் மனங்களிலும் எண்ணற்ற கேள்விகள்! காலமும், கடவுளும்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.