ms baskar about manobala

Advertisment

பிரபல நடிகரும் இயக்குநருமான மனோபாலா நேற்று உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி விஜயகாந்த், சீமான் என பல்வேறு அரசியல் தலைவர்களும் ரஜினி, கமல் தொடங்கி கார்த்தி, ஜெயம் ரவி என பல்வேறு திரை பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக தங்களது இரங்கலைத்தெரிவித்தனர்.

மேலும், சென்னை சாலிகிராமத்தில் உள்ள மனோபாலாவின் வீட்டில் விஜய், விஜய் சேதுபதி, ஆர்யா, சூரி, ஷங்கர் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து அவரை பற்றிய நினைவுகளை பகிர்ந்தனர்.

அப்போது நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசுகையில், "எல்லா படங்களையும் பார்த்துவிடுவார். எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். அனைத்து வீட்டின் நல்ல மற்றும் கெட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வார். கடைசியாக அவரை கோடாரம் படத்தின் படப்பிடிப்பில் சந்தித்தேன். அப்போது அவரது ரூமில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தோம். அவருடைய சில பிரச்சனைகளை சொல்லி மனவருத்தப்பட்டார். ரொம்ப நெருக்கமானவர்களிடம் அவரது பிரச்சனையை சொல்லி ஆற்றாமையை வெளிப்படுத்தி ஆறுதல் தேடி கொள்ளக்கூடிய ஒரு நபர். அதே சமயம் நமக்கு ஏதாவது ஒரு கஷ்டம் இருந்தாலும் ஆறுதல் சொல்லக் கூடிய ஒரு நபர். இந்த வருடத்தில் எனக்கு ஏற்பட்ட இரண்டாவது ஒரு இழப்பு. முதலில் மயில்சாமி, இரண்டாவது மனோபாலா அண்ணன்" என உருக்கமாகப் பேசினார்.

Advertisment

இயக்குநர் ஷங்கர் பேசுகையில், "எல்லா நிகழ்ச்சிகளுக்கும் மனோபாலாவை கூப்பிட்டு விடுவார்கள். சுற்றி உள்ள எல்லாரையும் மகிழ்விப்பார். அவர் வந்திருப்பதாகச் சொல்லி எங்களையும் கூப்பிடுவார்கள். இப்போது நான் இயக்கும் இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார். நகைச்சுவை கதாபாத்திரம் இல்லை. ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்" என்றார்.