mookuthi amman 2 movie official update

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்து கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜியோடு என்.ஜே.சரவணன் சேர்ந்து இயக்கியிருந்தார். கிரிஷ் ஜி இசையமைத்திருந்த இப்படம், கொரோனா பெருந்தொற்று காரணமாக நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது.

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பெரிய வெற்றியை அடைந்தது. இப்படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இதற்கிடையில், இப்படத்தில் இரண்டாம் பாகம் வரவிருப்பதாக அண்மை காலமாக தகவல் வெளியாகி வந்தது. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கவிருப்பதாகவும், அதில் திரிஷா அல்லது சமந்தா அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் அவ்வப்போது தகவல்கள் பரவி வந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் வரவிருப்பதாக படத்தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் இப்படத்தை வேல்ஸ் நிறுவனத்தோடு, நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தை இயக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வீடியோவிலும் ஆர்.ஜே.பாலாஜியின் பெயர் இல்லாததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

Advertisment