இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கூலி’ படம் வருகின்ற 14ஆம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் - ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் டாப் நடிகர்களான நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், இவர்களோடு சிறப்பு வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் மற்றும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பலரும் நடித்துள்ளனர். இதனால் படத்திற்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரம்மாண்ட ஓபனிங் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் கடந்த சில வாரங்களாக புரொமோஷன் பணிகளால் பேசு பொருளாகவே இருந்து வருகிறது. முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களிலே முதல் நாளுக்கான பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகி விட்டது. முன்பதிவிலே ரூ.14 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் படத்தின் வசூல் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையும் இந்த எதிர்பார்ப்பிற்குப் பக்கபலமாக அமைந்தது. இவர் இசையில் வெளியான ‘சிக்கிடு வைப்’, ‘மோனிகா’ மற்றும் ‘பவர்ஹவுஸ்’ பாடல்கள் உள்ளிட்ட அனைத்துமே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக மோனிகா பாடலின் லிரிக் வீடியோவில் பூஜா ஹெக்டே குத்தாட்டம் போட்டுள்ளதால் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இப்பாடல் பிரபல இத்தாலி நடிகை மோனிகா பெலூச்சியை கௌரவிக்கும் வகையில் எழுதப்பட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் விளக்கமளித்துள்ளார். இப்பாடல் யூட்யூபில் இதுவரை 68 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த நிலையில் மோனிகா பாடல் இத்தாலிய நடிகை மோனிகா பெலூச்சி வரை சென்றுள்ளது. அவருக்கு இந்த பாடல் மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை ஒரு ஆங்கில ஊடகத்தில் பூஜா ஹெக்டேவுடனான நேர்காணலின் போது தொகுப்பாளர் பகிர்ந்துள்ளார். அவர், மோனிகா பெலூச்சியின் நெருங்கிய நண்பர்களில் இருக்கும் ஒருவருக்கு மோனிகா பாடலை அனுப்பியதாகவும் பின்பு மோனிகா பெலூச்சிக்கு இந்த பாடல் பிடித்துவிட்டதாக ரிப்ளை வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனை கேட்டு ஆச்சரியப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்த பூஜா ஹெக்டே, “உண்மையாகவா... இதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. உண்மையைச் சொல்லப் போனால் நான் மோனிகா பெலூச்சியை மிகவும் ரசிப்பேன். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவர் தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கி ஒரு ஆளுமையாக இருப்பவர். அவருக்கென ஒரு தனித்துவமான குரல் வளம் மற்றும் ஸ்டைல் இருக்கிறது. அவருக்கு மோனிகா பாடல் பிடித்திருக்கிறது எனும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.