விடுதலை பாகம் 1’ வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் ‘விடுதலை பாகம் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த நடிகர்களோடு மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஏற்கனவே முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகள் இணைக்கப்பட்டு எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில் சமீபத்தில் வெளியான ட்ரைலர் அந்த எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியது.
இந்த நிலையில் பட ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் படக்குழு புரொமோஷன் பணிகளில் இறங்கியுள்ளது. கேரளாவிலும் இந்த படம் வெளியாகவுள்ளதால் இப்படத்திற்கு மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் தற்போது படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் படத்தை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவர் பேசும் வீடியோவை படக்குழு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.