இந்திய திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், சிவாஜி கணேசன், கே. பாலச்சந்தர், ரஜினிகாந்த் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை 2022ஆம் ஆண்டிற்காக தாதா சாகேப் பால்கே விருது பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டிற்காக தாதா சாகேப் பால்கே விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மலையாள முன்னணி நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சிறப்பான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோகன்லால் தனது 18வயதில் தனது திரை வாழ்க்கையை ‘திரநோட்டம்’ படம் மூலம் தொடங்கினார். ஆனால் அப்படம் சென்சார் பிரச்சனையால் அவரது 25வது வயதில் தான் வெளியானது. ஆனால் அதற்குள் ஏகப்பட்ட படங்களில் நடித்தார். பின்பு பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உருவெடுத்தார். மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்தார். கிட்டத்தட்ட 360 படங்களில் நடித்துள்ளார். தமிழில் இருவர், பாப் கார்ன், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான ‘புலி முருகன்’ படம் தான் மலையாளத் திரையுலகில் ரூ.100 கிளப்பை திறந்து வைத்தது. அதே போல் இவரது எம்புரான் படம் தான் மலையாள படங்களில் முதல் நாளில் அதிக வசூலித்த திரைப்படம் என கூறப்படுகிறது. ரூ.70 கோடிக்கும் மேல் இப்படம் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தனது திறமையான நடிப்பாலும் அமைதியான பண்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். இப்போது த்ரிஷ்யம் 3, விருஷபா உள்ளிட்ட இன்னும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுவரை இவர் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் 5 தேசிய விருதுகள் வென்றுள்ளார்.