மலையாள  முன்னணி நடிகராக மோகன்லால் சமீபத்தில் இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றிருந்தார். இதற்கு முன்பாக பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் 5 தேசிய விருதுகள் இவர் வென்றுள்ளார். மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என கிட்டத்தட்ட 360 படங்களில் நடித்துள்ளார். தமிழில் இருவர், பாப் கார்ன், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான ‘புலி முருகன்’ படம் தான் மலையாளத் திரையுலகில் ரூ.100 கோடி கிளப்பை திறந்து வைத்தது. அதே போல் இவரது எம்புரான் படம் தான் மலையாள படங்களில் முதல் நாளில் அதிக வசூலித்த திரைப்படம் என்ற பெயரைப் பெற்றதாக கூறப்படுகிறது. 

Advertisment

திறமையான நடிப்பாலும் அமைதியான பண்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்த மோகன்லால், தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றது தொடர்பாக அவரை கௌரவிக்கும் வகையில் கேரள அரசு ‘மலையாள வானொலம், லால் சலாம்’ என்ற தலைப்பில் பிரம்மாண்ட விழா எடுத்திருந்தது. கேரளா திருவனந்தபுரம் செண்ட்ரல் ஸ்டேடியத்தில் நடந்த இந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில அமைச்சர்கள், மூத்த இயக்குநர் மற்றும் கேரளாவில் முதல் தாதாசாகேப் பால்கே விருதுப் பெற்ற கலைஞர் அடூர் கோபாலகிருஷ்ணன், மலையாளத் திரையுலகினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Advertisment

நிகழ்ச்சியில் பேசிய மோகன்லால், “இந்த தேசிய அங்கீகாரத்தை, கேரளாவில் இருந்து பெற்ற இரண்டாவது நபராக இருப்பதில் நான் மிகவும் பணிவோடு இருக்கிறேன். இந்த விருதை என் சினிமா துறைக்கு கொடுக்கும் கௌரவமாக பார்க்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால், இந்த கௌரவத்தைப் பெறுவேன் என நான் கனவில் கூட நினைத்ததில்லை. அதனால் இது கனவு நனவான தருணம் கிடையாது. ஆனால் இது அதை விட பெரியது. ஒரு மாயாஜாலமானது மற்றும் புனிதமானது. இந்த விருது ஒரு தனி நபரின் சாதனைக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த மலையாளத் திரையுலகின் சகோதரத்துவத்துக்கு கிடைத்த அங்கீகாரம்” என்றார்.