Skip to main content

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்றிணைந்த மோகன் லால் - ஷோபனா ஜோடி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
mohanlal shobana at shooting spot of l 360

மலையாள முன்னணி நடிகர் மோகன் லால், கடைசியாக லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை அடுத்து பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எல்.2 - எம்புரான்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் மோகன்லாலின் 360ஆவது படம், தற்காலிகமாக எல்360 என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தை தருண் மூர்த்தி இயக்க ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் 15 வருடங்களுக்கு பிறகு மோகன் லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு முன்னால் 55 முறை இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அந்த அளவுக்கு இவர்களின் ஜோடி ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது . 

இந்தச் சூழலில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் மோகன்லாலும், ஷோபனாவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய சாதனை படைக்க மோகன்லாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
kamalhassan wishes mohan lal

இந்திய திரையுலகில் தமிழ், மலையாள, தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் மோகன்லால். மலையாளத் திரையுலகில் முதல் முறையாக ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் இவர் நடித்த புலிமுருகன். நடிப்பதைத் தாண்டி தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். 

இப்போது பிரித்விராஜ் இயக்கும் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான ‘எல்.2 - எம்புரான்’ மற்றும் தருண் மூர்த்தி இயக்கும் அவரது 360வது படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார் மோகன்லால். இதையொட்டி ரசிகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கமல்ஹாசன், அவரது எக்ஸ் தள பக்கத்தில், “கடும் விமர்சனங்கள் மற்றும் பகுத்தறியும் ரசிகர்களுக்கு மத்தியில் 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருக்கிறார். 400 திரைப்படங்களா? சிலருக்கு அவநம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் அவர் தொடர்ந்து படங்கள் நடித்து, 500 படங்கள் நடித்த பிரேம் நசீரின் சாதனையை முறியடிக்க வேண்டும். அதை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் பிறந்தநாளில் என் வாழ்த்தும் அதுதான். பல சாதனைகளை முறியடிக்க நல்ல ஆரோக்கியத்துடன் இருங்கள் மோகன்லால்” எனக் குறிப்பிட்டுள்ளார். இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாகவும், உன்னைப் போல் ஒருவன் படத்தில் இணைந்தும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“நீங்கள் தான் ஒரிஜினல்” - வைரல் வீடியோ குறித்து ஷாருக்கான் - மோகன்லால்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sharukhan mohan lal conversation about mohan lal viral dance video

கேரளா கொச்சியில் சமீபத்தில் நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் மோகன்லால் கலந்து கொண்டார். அதில் அவர் ரஜினியின் ஜெயிலர் படத்திலிருந்து ‘ஹுக்கும்...’ பாடலுக்கும் ஷாருக்கானின் ஜவான் படத்திலிருந்து ‘ஜிந்தா பந்தா...’ பாடலுக்கும் மேடையில் நடனமாடினார். அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் மோகன்லால் ரசிகர்களோடு இணைந்து ரஜினி ரசிகர்களும் ஷாருக்கான் ரசிகர்களும் அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்தனர். 

இந்த நிலையில் ஷாருக்கான் மோகன்லால் நடன வீடியோ குறித்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், “இந்தப் பாடலை இப்போது எனக்கு மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி மோகன்லால் சார். நீங்கள் ஆடியதில் சரிபாதி அளவு நன்றாக நடனமாடியிருப்பேன் என விரும்புகிறேன். லவ் யூ சார். உங்கள் வீட்டு டின்னருக்காக காத்திருக்கிறேன். நீங்கள் தான் ஒரிஜினல் ஜிந்தா பந்தா” எனக் குறிப்பிட்டிருந்தார். 

ஷாருக்கான் பதிவிற்கு தற்போது மோகன் லால் நன்றி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “டியர் ஷாருக்கான். உங்களைப் போல் யாராலும் நடனமாட முடியாது.  உங்களது ஒப்பற்ற  உன்னதமான ஸ்டைலில் நீங்கள் தான் ஒரிஜினல் ஜிந்தா பந்தா. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. வெறும் டின்னர் மட்டும் தானா? பிரேக் ஃபாஸ்ட் கூடாதா?” எனக் குறிப்பிட்டுள்ளார். 

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்த படம் 'ஜவான்'. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்து நல்ல வரவேற்ப்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஷாருக்கான் கடைசியாக ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டங்கி படத்தில் நடித்திருந்தார். அடுத்த பட அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மோகன்லால், பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எல்.2 - எம்புரான்’ மற்றும் தருண் மூர்த்தி இயக்கத்தில் அவரது 360வது படத்தில் நடித்து வருகிறார்.