மலையாள முன்னணி நடிகரான மோகன்லாலுக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் மகன் பிரணவ் மலையாளத் திரையுலகில் நாயகனாக வலம் வருகிறார். 2018ஆம் ஆண்டு வெளியான ஆதி படம் மூலம் நாயகனாக அறிமுகமாகி கடைசியாக மோகன்லால் நடித்த எம்புரான் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். மகள் விஸ்மயா 2021ஆம் ஆண்டு ‘க்ரைன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருந்தார். இதைத் தாண்டி தற்காப்பு கலைகளில் ஆர்வமிக்கவரக இருக்கிறார்.
இந்த நிலையில் விஸ்மயா திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற 2018 படத்தை இயக்கிய ஜூட் ஆந்தனி ஜோசஃப் இப்படத்தை இயக்குகிறார். ஆஷீர்வாத் சினிமாஸ் பேனரில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். படத்திற்கு ‘துடக்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பு போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த மோகன்லால், “டியர் மாயாக்குட்டி, துடக்கம் படம் நீ சினிமாவில் வைத்திருக்கும் வாழ்நாள் காதலின் முதல் படியாக இருக்கட்டும்” எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.