
மோகன்லால் நடிப்பில், 'த்ரிஷ்யம் 2' படத்தின் ஷூட்டிங், செப்டம்பர் 21ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டது. 56 நாட்கள் திட்டமிட்டுப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், 46 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு மோகன்லால், மீனா உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஒத்துழைப்பே காரணம் என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேபோல அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கப்பட்ட சிம்பு நடிக்கும் 'ஈஸ்வரன்' படத்தின் ஷூட்டிங், 30 நாட்களுக்குள் முடிவடைந்துவிட்டது. இந்த படத்திற்கான டப்பிங்கையும் முடித்துக்கொடுத்துவிட்டு, அடுத்து 'மாநாடு' பட ஷூட்டிங்கிற்குக் கிளம்பிவிட்டார்.
இந்நிலையில், இவ்விரு படங்கள் குறித்து, தனது பாராட்டை தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன். அதில், "இந்தக் கரோனா காலத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்டுக் குறைவான காலத்திலேயே நிறைவு செய்யப்பட்ட மோகன்லால் நடிக்கும் 'த்ரிஷ்யம் 2', சிம்பு நடிக்கும் 'ஈஸ்வரன்' ஆகிய படங்களிலிருந்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். திரைப்படங்கள் இவ்வாறுதான் குறைந்த காலத்தில் தயாரிப்பாளர்களின் செலவைக் குறைக்கும் பொருட்டுத் திட்டமிட்டு எடுக்கப்பட வேண்டும். அற்புதம்" என்று தெரிவித்துள்ளார்.