
தெலுங்கில் மூத்த நடிகராக வலம் வருபவர் மோகன் பாபு. இவருக்கு லட்சுமி மஞ்சு என்ற மகளும் விஷ்ணு மஞ்சு மற்றும் மஞ்சு மனோஜ் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் இளைய மகனான மஞ்சு மனோஜ் மற்றும் தந்தை மோகன் பாபு இருவருக்கும் கடந்த சில வருடங்களாக சொத்து பிரச்சனை காரணமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. தந்தை மோகன் பாபு, கடந்த ஆண்டு சொத்து தகராறு தொடர்பாக மகன் மஞ்சு மனோஜ் மீது ரச்சகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முன்னதாக இந்த பிரச்சனை காரணமாக மோகன் பாபு வீட்டிற்கு செய்தி சேகரிக்க செய்தியாளர்களை மோகன் பாபு மைக்கால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மஞ்சு மனோஜ் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்வதற்கு முந்தைய நாள் திருப்பதியில் சித்தூர் மாவட்டத்தின் சந்திரகிரி தொகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மனோஜ் பங்கேற்றார். அப்போது, மனோஜ் தனது அரசியல் ஆசைகள் குறித்துப் பேசியிருந்தார். அதே சமயம் சமீபத்தில் ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷையும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் சந்தித்திருந்தார்

இந்த சூழலில் தந்தை மோகன் பாபு கொடுத்த புகாரின் காரணமாகவே மஞ்சு மனோஜ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதியில் கைது செய்யப்பட்ட அவர் பகராபேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் தற்போது காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனிடையே கைது செய்த போது காவல் துறையினரிடம் மனோஜ் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.