பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மா வந்தே’(Maa Vande) எனும் தலைப்பில் உருவாகுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். இவர் தனுஷ் நடித்த சீடன் படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். பின்பு மலையாளத்தில் பிரபல நடிகராக மாறி தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூரி நடித்த ‘கருடன்’ படத்தில் நடித்திருந்தார்.
மோடி பயோ-பிக் படத்தை‘சில்வர் கேஸ்ட் கிரியேஷன்’ சார்பாக வீர் ரெட்டி என்பவர் தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குநர் கிராந்தி குமார் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் மோடியின் தனிப்பட்ட மற்றும் அரசியல் பயணத்தை மையப்படுத்தி உருவாகிறது. மேலும் அவரது தாயாருடன் அவருக்கு இருக்கும் பாசப்பிணைப்பையும் எடுத்துரைக்கிறது. இப்படம் ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழியில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கே.ஜி.எஃப் பட புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். மேலும் படத்தொகுப்பு பணிகளை பிரபல தமிழ் சினிமா படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மேற்கொள்கிறார். இது தொடர்பாக அறிவிப்பு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாடாளுமன்ற கட்டப் பின்னணியில் மோடி கையெழுத்திடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கும் முயற்சி இது முதல் முறை அல்ல. ஏற்கனவே விவேக் ஓபராய் நடிப்பில் ஓமங் குமார் இயக்கத்தில் ‘பிஎம் நரேந்திர மோடி’ எனும் தலைப்பில் 2019ஆம் ஆண்டு ஒரு படம் வெளியானது. இந்தியில் வெளியான இப்படம் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.