
சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கலச் சிலை திருச்சியில் 14ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. ஆட்சியின் போது நிறுவப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் உள்ளிட்ட சில காரணங்களால் சிலை திறக்கப் படாமலே நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சிலை திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில், அமைக்கப்பட்டது.
இதையடுத்து சட்டப்பேரவையில் இந்த சிலை திறப்பு விழா தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் கே.என். நேரு, வேறு இடத்தில் பூங்காவில் சிவாஜி சிலை நிறுவப்பட்டு திறக்கப்படும் என பதிலளித்தார். அதன் படி சிவாஜி சிலை வார்னர்ஸ் சாலையில் உள்ள மினி பூங்காவில் மாற்றப்பட்டு நிறுவப்பட்டது. ஆனால் பொது இடங்களில் சிலை நிறுவக்கூடாது என்ற உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் மீண்டும் சிலை திறப்பு விழா தள்ளிப் போனது.
இதையடுத்து மீண்டும் சிவாஜி சிலை புத்தூர் பகுதிக்கு மாற்றப்பட்டு நிறுவப்பட்டது. இது தொடர்பாக திருச்சி மாநகராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பின்பு திறப்பு விழா இன்று முதல்வர் திறந்து வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி திருச்சிக்கு நாளை திறக்கப்படவுள்ள பஞ்சப்பூர் பேருந்து முனைய திறப்பு விழாவிற்காக வந்திருந்த முதல்வர் இன்று(07.05.2025) மாலை சிவாஜி சிலையை திறந்து வைத்தார். திறப்பு விழாவில் சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு மற்றும் அவரது மகனும் நடிகருமான விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர் உடனிருந்தனர்.