மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியும் நடிகைகள் ராதிகா மற்றும் நிரோஷாவின் தாயுமான கீதா ராதா(86) வயது மூப்பு காரணமாக நேற்று மாலை மறைந்தார். எம்.ஆர்.ராதாவுக்கு மூன்று மனைவிகள். அதில் மூன்றாவது மனைவி தான் கீதா. இரண்டாவது மனைவியான தனலக்ஷ்மியின் மகன் தான் நடிகர் ராதா ரவி.
கீதா ராதாவின் மறைவு ராதிகா குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் வட்டாரத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பேயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாலை 4.30 மணிக்கு பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் திரைபிரபலங்கள் பாக்கியராஜ், நாசர், சிவக்குமார், பிரபு, பொன்வண்ணன், சரண்யா, ரேகா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ராதிகா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இந்த சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடைய மனைவி கீதா ராதா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் சகோதரி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.