மித்தாலஜி படமான ஹனுமேன் படம் மூலம் தெலுங்கு சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து மாபெரும் ஹிட் கொடுத்த நடிகர் தேஜா சஜ்ஜா தற்பொழுது அதேபோன்று ஒரு மித்தாலஜி கதை அம்சத்தை கொண்ட மிராய் படம் மூலம் மீண்டும் கோதாவில் குதித்து இருக்கிறார். தன் முந்தைய படம் கொடுத்த அதே போன்று ஒரு வெற்றியை இந்த படம் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் களம் இறங்கிய அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிட்டியதா, இல்லையா? 

Advertisment

மிகப்பெரிய கலிங்கத்துப் போர் நடந்து முடிந்த பிறகு குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் மன்னர் அசோகர் தனக்குள் இருக்கும் சக்திகளை ஒன்பது புத்தகத்தில் அடைத்து அந்த புத்தகங்களை ஒன்பது வீரர்களிடம் பத்திரமாக பாதுகாக்க ஒப்படைக்கிறார். காலம் கடந்து தலைமுறை கடந்து 9 வீரர்கள் அந்த புத்தகத்தை வேறு வேறு நாட்டில் பாதுகாத்து வருகின்றனர்.  அந்த ஒன்பது புத்தகங்களை அடையும் நபர் கடவுளுக்கு நிகரான சக்தி உலகையே ஆளும் சக்தியை பெற்று விடுவார். இதனை அறிந்த மனோஜ் மஞ்சு அந்தப் புத்தகங்களை எப்படியாவது கைப்பற்றி இந்த உலகை அழிக்க நினைக்கிறார். இதனை தன் சக்தியால் முன்கூட்டியே அறிந்து கொண்ட சாகாவரம் சக்தி உடைய ஒன்பதாவது புத்தகத்தை வைத்திருக்கும் ஸ்ரேயா தன் மகன் தேஜா சஜ்ஜாவை வைத்து மனோஜ் மஞ்சுவை அழிக்க திட்டமிடுகிறார்.

அந்தத் திட்டத்தில் ராமருடைய மிராய் பெரும் பங்கு ஆற்றுகிறது. ராமரின் மிராயை தேஜா சஜா கைப்பற்றினால் மட்டுமே மனோஜ் மஞ்சுவை கட்டுப்படுத்த முடியும். இதற்கிடையே மனோஜ் மஞ்சு தன் அபார சக்தியால் எட்டு புத்தகங்களை கைப்பற்றி விடுகிறார். அடுத்ததாக ஒன்பதாவது புத்தகத்தை அவர் நெருங்கி விடுகிறார். இதைத்தொடர்ந்து அவர் அந்த ஒன்பதாவது புத்தகத்தை கைப்பற்றி உலகை அழித்தாரா, இல்லையா? ராமரின் மிராய் தேஜா சப்ஜாவுக்கு கிடைத்ததா, இல்லையா? இறுதிக்கட்ட மோதலில் யார் வென்றார்கள்? என்பதே மிராய் படத்தின் மீதி கதை. 

சமீப காலங்களாக தெலுங்கு சினிமாவில் இந்த மாதிரியான மித்தாலஜி சம்பந்தப்பட்ட பான் இந்திய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வரிசையில் இடம் பெறுவதற்காக உருவாகி இருக்கும் இந்த மிராய் திரைப்படம் எந்த வகையிலும் மற்ற படங்களுக்கு சளைத்தது இல்லை என நிரூபித்து வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு மித்தாலஜிக்கல் கதையை வைத்துக்கொண்டு அதன் மூலம் இக்காலத்திற்கு ஏற்றார் போல் விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்து குறிப்பாக ‘வி எப் எக்ஸ்’ காட்சிகளை மிக மிக சிறப்பாக பயன்படுத்தி அதன் மூலம் விறுவிறுப்பான அதேசமயம் பிரம்மாண்டமான கலகலப்புடன் கூடிய திரில்லிங்கான படமாகவும் இந்த மிராய் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி.

Advertisment

முதல் பாதி முழுவதும் தான் யார் என தெரியாத நாயகன் அதற்கான தேடலை தொடங்கி அதன் பின் தான் இந்த உலகத்தில் அவதரித்ததற்கான காரணத்தை கண்டுபிடித்து அதற்கான வேலையை தொடங்கி மிராயை நோக்கிய பயணமாக நகர்ந்து இரண்டாம் பாதியில் மிராய் காண தேடல் மனோஜ் மஞ்சு உடன் மோதல் என காட்சிக்கு காட்சி பிரம்மாண்டங்களை கூட்டி ‘வி எப் எக்ஸ்’ மூலம் கண்களுக்கு விருந்து படைத்து ரசிக்கும்படியான ஒரு பிரம்மாண்ட படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியாக ஒரு விறுவிறுப்பான ஜனரஞ்சகமான பேண்டஸி படத்தை கொடுத்த இயக்குநர் அதனுள் தாய் பாசம் உட்பட கதைக்கான ஆழத்தையும் அழுத்தத்தையும் சிறப்பான முறையில் நேர்த்தியாக கொடுத்து நம் மக்கள் ரசனைக்கேற்ப சிறப்பான படமாக இந்த மிராய் படத்தை உருவாக்கியிருக்கிறார். இது ஒரு மித்தாலஜிக்கல் ஃபேண்டஸி படம் என்பதால் லாஜிக் பார்க்காமல் மேஜிக்கை மட்டும் நம்பி செல்பவர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்திருக்கிறது. 

தன் உடல்வாகு நடிப்புக்கு ஏற்ற புத்திசாலித்தனமாக ஃபேண்டஸி கதை அம்சம் கொண்ட கதைளத்தை தேர்வு செய்து அதனுள் தனக்கு இருக்கும் ஆசைகளை தீர்த்துக் கொண்டு அதன் மூலம் விறுவிறுப்பான படங்களை கொடுத்து ரசிக்க வைப்பது வழக்கமாகக் கொண்டுள்ளார் நடிகர் தேஜா சஜா. அதற்கு அவருக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. சென்ற படத்தை போல் இந்த படத்திலும் ஆக்சன் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் காமெடி காட்சிகளிலும் கமர்சியல் ஹீரோக்கள் என்ன செய்வார்களோ அவர்களுக்கு நிகராக இவரும் ஹீரோயிசம் மிகுந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன்மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். பெரிய ஹீரோக்களுக்கு நிகராக இவர் செய்யும் ஹீரோயிசம் இந்த பேண்டஸி கதை தேர்வால் காப்பாற்றப்பட்டு ரசிக்க வைக்கப்படுகிறது. மிகவும் புத்திசாலித்தனமான இவரின் கதை தேர்வு இவரது கரியறையும் காப்பாற்றி வருகிறது.

வில்லனாக கலக்கி இருக்கும் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான மஞ்சு மனோஜ் அந்த வில்லனுக்கே உரித்தான கம்பீரத்தை தன் உடல்வாகு மற்றும் ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழிலும் நடித்து இருக்கும் அவர் தனக்கான குரல் பதிவை தன் சொந்த குரலிலேயே கொடுத்திருப்பது அவரது கதாபாத்திரத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தின் வில்லத்தனத்திற்காக தன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு மிடுக்கான தோற்றத்துடன் ஆக்சன் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். கையில் வாலை வைத்துக் கொண்டு இவர் செய்யும் சண்டை மிக சிறப்பு. இவரது கதாபாத்திரம் அவெஞ்சர்சில் வரும் தானோசை நினைவு படுத்தினாலும் தன் வில்லத்தனமான நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கு நன்றாக உயிர் கொடுத்திருக்கிறார். பார்ப்பவர்களை நடுங்க வைக்கும்படியான இவரது மிரட்டலான வில்லத்தனம் அந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து படத்திற்கும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

Advertisment

தேஜாவின் தாயாராக வரும் ஸ்ரேயா நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பான முறையில் நடித்திருக்கிறார். இவரது கதாபாத்திரமே படத்தின் அடி நாதமாக அமைந்து படத்தையும் காப்பாற்றி கரை சேர்த்திருக்கிறது. இவர் வரும் காட்சிகள் எல்லாம் சென்டிமென்ட் அம்சங்கள் கண்ணை கலங்கடிக்க செய்கின்றன. முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஜெயராம், தனக்கு கொடுத்த வேலையை வழக்கம் போல் சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார். நாயகியாக வரும் ரித்திகா நாயக் வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் நாயகனுடன் பயணிக்கும்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். அந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை மட்டும் சிறப்பாக செய்து படத்தையும் ஒரு பக்கம் தன் தோள்மேல் தாங்கி பிடித்திருக்கிறார். மற்றொரு முக்கிய பாத்திரத்தில் வரும் ஜெகபதி பாபு சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதியும் படியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகனுடன் வரும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் இருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி காட்சிகளை கலகலப்பாக வைக்க உதவியிருக்கின்றனர். இவர்களுக்கும் நாயகனுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகி காட்சிக்கு காட்சி ஜனரஞ்சகமாக அமைந்து திரைக்கதைக்கும் வேகம் கூட்டி இருக்கிறது. இருவரும் தேவையான இடங்களில் நன்றாக காமெடி செய்து சிரிக்கவும் வைத்திருக்கின்றனர். அதுவே படத்திற்கு பிளஸ் ஆகவும் அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. மற்றபடி படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கின்றனர். குறிப்பாக வில்லன் மனோஜ் மஞ்சுவின் அடியாளாக வரும் பெண் கதாபாத்திரம் ஆக்சன் காட்சிகளில் அதகலப்படுத்தி இருக்கிறார்.

கார்த்திக் கட்டமமேனி ஒளிப்பதிவில் காட்சிகள் உலகத்தரம். இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. குறிப்பாக வி எப் எக்ஸ் காட்சிகளை பயன்படுத்திய விதம் வேற லெவல். அதற்கு முத்தாய்ப்பாக ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் அபாரமாக இருக்கிறது. கௌரா ஹரி இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை அபாரம். ஒரு மித்தாலஜிக்கல் பேண்டஸி பிரம்மாண்டப்படத்திற்கு எந்த மாதிரியான இசை தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். இவரது பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. 

ஒரு மித்தாலஜிக்கல் கதையை வைத்துக்கொண்டு அதனுள் நேர்த்தியான ஜனரஞ்சகமான திரைக்கதை அமைத்து இந்த கால ரசிகர்களும் ரசிக்கும்படி கொடுத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. குறிப்பாக படத்தின் மேக்கிங் மற்றும் வி எப் எக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பது கண்ணுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. அதுவே நம்மை இந்த படத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. லாஜிக்கை மறந்துவிட்டு வெறும் மேஜிக்கிற்காக செல்லும் பட்சத்தில் மிராய் நம் கண்களுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட காட்சி விருந்து.

மிராய் - கண்களுக்கு விருந்து!