ministry of information and broadcasting team reply to vishal allegation

விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நேற்று (28.09.2023) முதல் இந்தியில் வெளியாகியுள்ளது.

Advertisment

இதையடுத்து தணிக்கை வாரிய குழுவில் ஊழல் நடப்பதாக விஷால் பரபரப்பான ஒரு குற்றச்சாட்டை வைத்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திரையில் ஊழலை காட்டுவது பரவாயில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் அதை ஜீரணிக்க முடியாது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் நடப்பது. மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய குழுவின் மும்பை அலுவலகத்தில் இன்னும் மோசமாக நடக்கிறது. எனது மார்க் ஆண்டனி இந்தி பதிப்பிற்கு 2 பரிவர்த்தனைகளாக 6.5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. திரையிடலுக்கு 3 லட்சம் மற்றும் சான்றிதழுக்கு 3.5 லட்சம்.

Advertisment

படத்தை வெளியிடவேண்டும் என்ற நெருக்கடியால் பணம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே இதை மகாராஷ்டிராவின் முதலமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதை செய்வது எனக்காக அல்ல எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக. நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போவதா? வாய்ப்பே இல்லை. எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது திரையுலகில் பரபரப்பைக்கிளப்ப தற்போது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அவர்கள் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தணிக்கை குழுவின் மேல் விஷால் வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு மிகவும் துரதிருஷ்டவசமானது. ஊழலை அரசு பொறுத்துக் கொள்ளாது, இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி இன்று விசாரணை நடத்த மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.