Skip to main content

கலைஞருக்கு காட்ட முடியாமல் போன படம்; அருள்நிதி பரிந்துரைத்த படம் முதல் கடைசி படம் வரை - சுவாரசியம் பகிரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

 Minister Udhayanidhi Stalin Interview

 

அமைச்சரான பிறகு படு பிசியாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நமது நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக அவரது 'கண்ணை நம்பாதே' படக்குழுவுடன் சந்தித்தோம். அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட பல சுவாரசியமான தகவல்களை பின்வருமாறு காணலாம்.

 

அரசியலுக்கு வந்த பிறகு படங்களில் நடிக்க அதிக நேரமில்லை என்பது உண்மை. 'கண்ணை நம்பாதே' படமும் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் தான். கொரோனாவாலும் என்னுடைய பணிகளாலும் படப்பிடிப்பு தாமதமானது. 'மாமன்னன்' படம் தான் என்னுடைய கடைசிப் படமாக இருக்கும். கமல் சார் தயாரிக்கும் படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது தான் எனக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் முடிவை முதலமைச்சர் எடுத்தார். அதனால் அந்தப் படத்திலிருந்து விலகினேன். 

 

இப்போது ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும் எனக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை. கண்ணை நம்பாதே படத்தின் இயக்குநர் மாறன் மிகவும் திறமைசாலி. இந்த நான்கு வருடங்களில் அவர் குறைந்தது நான்கு படங்களாவது செய்திருக்க வேண்டும். அப்படி செய்ய முடியாமல் போனதற்கு நானும் ஒரு காரணம். இந்தப் படத்தின் திரைக்கதை மிகவும் வேகமாக இருக்கும். பல வகையான சேசிங் காட்சிகள் இருக்கின்றன. அருள்நிதி நடித்த 'வம்சம்' படத்தின் கதை முதலில் எனக்கு வந்தது. ஆனால், என்னால் ஆழமான கிராமத்துக் கதையில் நடிக்க முடியாது என்று அதை அருள்நிதியிடம் அனுப்பினேன். இந்தப் படத்தை அவர் என்னிடம் அனுப்பினார். 

 

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தைப் பார்க்க நான் தாத்தா கலைஞரை அழைக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து அவரே என்னை அழைத்து, ‘ஏன்டா உன்னுடைய படம் ரிலீஸ் ஆகியிருக்கிறதாமே; பெரிய வெற்றி என்று கேள்விப்பட்டேன்; எனக்கெல்லாம் உன்னுடைய படத்தைக் காட்ட மாட்டாயா?’ என்று கேட்டார். அதன் பிறகு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்தேன். இரண்டாவது படமும் பார்த்தார். என்னை வாழ்த்தினார். அதன் பிறகு அவருடைய உடல்நிலை காரணமாக என்னுடைய படங்களை அவருக்குக் காட்ட முடியவில்லை. 'மனிதன்' படத்தை அவருக்குக் காட்ட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் முடியவில்லை.

 

நல்ல கருத்துகளோடு செய்யப்படும் புதிய முயற்சிகளுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். 'அயலி' பெரிய வரவேற்பைப் பெற்றது. அரைத்த மாவையே அரைத்தால் நிராகரித்து விடுவார்கள். நல்ல படங்கள் அனைத்துமே இந்தியா முழுமைக்குமான படங்களாக மாறிவிட்டன. அந்த வகையில் ஓடிடி நன்மைதான் செய்திருக்கிறது. தற்போது இளைஞரணி சார்பாக திராவிட இயக்க பயிற்சி பாசறைகள் நடத்தி வருகிறோம். வதந்திகள் பரவுவதை முறியடிக்க வேண்டிய தேவை உள்ளது. திராவிட இயக்க வரலாற்றை இளைஞர்களிடம் கடத்த வேண்டிய பணி உள்ளது. 

 

அமைச்சராக தமிழ்நாடு முழுவதும் 15 விளையாட்டுகளை உள்ளடக்கிய 'முதலமைச்சர் கோப்பை' நடத்தவுள்ளோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவுள்ளோம். உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகளை நாம் நடத்தவுள்ளோம். 8 நாடுகள் பங்கேற்கின்றன. ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளை சென்னையில் நடத்தவுள்ளோம். கேலோ போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தவும், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்கவும் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்தபோது கோரிக்கை வைத்துவிட்டு வந்திருக்கிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்