Skip to main content

“இசையில் புரட்சி ஏற்படுத்தியவர்” - இளையராஜாவிற்கு அமைச்சர் வாழ்த்து

Published on 15/05/2025 | Edited on 15/05/2025
minister saminathan wishes ilaiyaraaja regards his 50 years of journey

இசையமைப்பாளர் இளையராஜா தமிழ் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இவர் அறிமுகமான அன்னக்கிளி படம் நேற்றுடன் வெளியாகி 49 ஆண்டுகள் முடிந்து 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனால் பொன் விழா காணும் இளையராஜாவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “கலைஞரால் அன்புடன் ‘இசைஞானி’ என அழைக்கப்பட்டவர் இசையமைப்பாளர் இளையராஜா. அந்த பெயரே இன்றைக்கு தமிழரின் இசை அடையாளமாக உலகெங்கும் ஒலிக்கிறது.

இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷண் மற்றும் பத்மவிபூஷண் விருதும், நான்கு முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும், ‘மேஸ்ட்ரோ’ என்று அனைவராலும் அழைக்கப்படுபவரும், இலண்டன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவுடன் பணியாற்றிய முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமை பெற்றவரும், 8,500-மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவரும், 1,500க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு பின்னணி இசையமைத்தவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா, 1976-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தமிழ் சினிமா இசையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்திய இசைஞானிக்கு 14.05.2025 அன்று தமிழ் சினிமா உலகில் பொன் விழா ஆண்டு என்பது நமக்கெல்லாம் பெருமையளிக்கிறது.

இந்நாள் அவருக்கு பொன்னாள். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இளையராஜாவின் இசை என்றென்றும் இசைத்துக் கொண்டே இருக்கட்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க இசை வாழ்க இசைஞானியின் புகழ்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்