
எம்.ஜி.ஆர் முதன் முதலாக தயாரித்து, இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்’. சினிமா வரலாற்றில் வெற்றிச் சரித்திரத்தை ஏற்படுத்திய இந்த சித்திரம், ‘இதேபோல் ஒரு வெற்றிக் காவியத்தைத் தர வேண்டும்’ என்கிற எண்ணத்தை எம்.ஜி.ஆருக்குள் ஏற்படுத்தியது.
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கற்பனை கலந்த வரலாற்றுப் புதினம் தமிழ்ப் பரப்பில் உண்டாக்கியிருக்கும் தாக்கத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர்., அந்தக் கதையை படமாக்கிடும் உரிமையையும் முறைப்படி பெற்றார். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கவிருப்பதாக அறிவிப்பும், விளம்பரங்களும் வெளியானது.
‘பொன்னியின் செல்வன்’ கதை மாந்தர்களான வந்தியத்தேவன், குந்தவை, பூங்குழலி ஆகிய பாத்திரங்களை முதன்மைப்படுத்தி படம் எடுக்க திட்டமிட்ட எம்.ஜி.ஆருக்குள் பழம்பெரும் இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் மகளான பத்மா சுப்பிரமணியத்தை கதாநாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணம் உறுதியாக இருந்தது. தன் எண்ணத்தை கே. சுப்பிரமணியத்திடம் தெரிவிக்க, ‘எனக்கு ஆட்சேபனை இல்லை’ எனச் சொல்லிவிட்டார். ஆனால் பத்மாவோ தனக்கு சினிமாவில் நடிக்க துளியும் விருப்பமில்லை எனச் சொல்லிவிட்டார். அவரின் கவனம் முழுக்க இசை மற்றும் நாட்டியத்துறையில் நாட்டம் கொண்டிருந்தது.

பத்மா சுப்பிரமணியம்
‘பொதுவாக எம்.ஜி.ஆரின் படங்கள் சீக்கிரம் முடியாது. நீண்ட கால தயாரிப்பில் இருக்கும். அதனால்தான் பத்மா நடிக்கத் தயங்குகிறார்’ என ஒரு பேச்சு எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு எட்டியது. ஒரு விழாவில் பத்மாவும், எம்.ஜி.ஆரும் கலந்து கொண்ட அந்த மேடையில், “பத்மா நடிக்க சம்மதித்தால் நான்கு மாதங்களில் படத்தை எடுத்து முடித்து விடுவேன்” என எம்.ஜி.ஆர் சொன்னார். ஆனாலும் சினிமாவுக்கு வர பத்மா சம்மதிக்கவில்லை. பத்மா இல்லாத ‘பொன்னியின் செல்வன்’ படத்தை விரும்பாத எம்.ஜி.ஆரும் அந்த படத்திட்டத்தை கைவிட்டார். இன்றளவும் பரத நாட்டிய ஆராய்ச்சி, வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் பத்மா சுப்பிரமணியம்.
கவிஞர் வைரமுத்து திரைப்பட பாடலாசிரியாகவும், நாவலாசிரியாகவும் பன்முகத்தன்மையுடன் திகழ்பவர். ‘நட்பு’ உள்ளிட்ட சில படங்களுக்கு கதை, வசனமும் எழுதியிருக்கிறார். கவிஞருக்குள் திரைப்பட இயக்குநனர் ஆக வேண்டும் என்கிற கனவும் இருந்தது. ‘இது உண்மைக்கதையுமல்ல... கற்பனைக்கதையுமல்ல’ என்கிற அறிவிப்போடு வைரமுத்து எழுதிய ‘ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்’ கதை படிக்கச் சுகமானது. நிலக்கோட்டை வெள்ளையம்மா, வெள்ளையம்மா மகள் அம்சவல்லி ஆகிய நாட்டியப் பெண்களை பிரதானப்படுத்தி ஜமீன் பின்னணியில் உருவாக்கியிருந்த இந்தக் கதையைப் படமாக்க, படமாக டைரக்ஷன் செய்ய விரும்பினார் வைரமுத்து.

ஸ்ரீநிதி ரங்கராஜன்
90களின் தொடக்கத்தில் பரத நாட்டிய உலகில் புதிய நட்சத்திரமாய் உருவெடுத்த ஸ்ரீநிதி ரங்கராஜனை மனதுக்குள் அம்சவல்லியாக நினைத்து வைத்திருந்த வைரமுத்து ‘ஸ்ரீநிதி நடிக்க சம்மதித்தால் நான் சினிமா டைரக்டராவேன்’ என பத்திரிகைகள் மூலம் ஸ்ரீநிதிக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் சினிமாவில் நடிக்க விரும்பாத ஸ்ரீநிதி அதை நிராகரித்தார். வைரமுத்துவும் இயக்குநராகும் ஆசையை கைவிட்டார். அந்த ஸ்ரீநிதி ரங்கராஜன்தான் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவியானார். இப்படி அன்றொரு நாள், நாட்டிய தாரகை பத்மா எம்.ஜி.ஆருக்கு ‘நோ’ சொன்னார். பின்பொரு நாள் நாட்டிய தாரகை ஸ்ரீநிதி வைரமுத்துக்கு ‘நோ’ சொன்னார்.
முந்தைய பகுதி :
நயன்தாராவுக்கும் சரோஜாதேவிக்கும் ஒரே ஃப்ளாஷ்பேக்! - பழைய ரீல் #1