metro director new movie update

'மெட்ரோ ' பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை மற்றும் திரைக்கதையில் எஸ்.எம்.பாண்டி என்பவர் இயக்கியுள்ள படம் 'ராபர்'. இப்படம் சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் இப்படத்தை தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார். ஜோகன் சிவனேஷ் என்பவர் இசை அமைத்துள்ளார்.

Advertisment

இப்படத்தில் மெட்ரோ படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த சத்யா நாயகனாக நடிக்க, அவருடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை சிவகார்த்திகேயன் கடந்த ஆண்டு வெளியிட்டார்.

Advertisment

இப்படம் குறித்து தயாரிப்பாளர் கவிதா பற்றிப் பேசும்போது, “உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பதால் காட்சிகளும் உண்மைக்குப் பக்கத்தில் இயல்பாக இருக்கும். 'ராபர்' படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது. அப்படி ஒரு காட்சியை செம்மஞ்சேரி குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது படத்தில் திருடனாக நடித்துக் கொண்டிருந்த துணை நடிகரை உண்மையான திருடன் என நினைத்து அப்பகுதி மக்கள் தாக்கி விட்டனர். இது படத்தின் காட்சிகள் இயல்பாக இருப்பதற்கான ஒரு சின்ன உதாரணம் என்று சொல்வேன்.

நகர்ப் பகுதிகளில் குறிப்பாக மாநகரங்களில் நடைபெறும் குற்றச் செயல்களின் பின்னணியில் கஞ்சா, மது மற்றும் போதைப் பொருள்களின் புழக்கம் இருப்பதாகக் குற்றவியல் சார்ந்த புள்ளி விவரம் கூறுகிறது .இது போன்ற போதைப் பழக்கங்கள் இளைஞர்களை முன்னேற விடாமல், சிந்திக்க விடாமல் குற்றச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. அதைப் பார்ப்பவரை உணரவைக்கும் படி இந்தப் படம் அமைந்திருக்கும். பெற்றோர்கள் பெண் குழந்தைகள் இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும்” என்றார். ராபர் படம் மார்ச் மாதம் வெளியிட அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது.

Advertisment