mega akash

Advertisment

இந்த வருட காதலர் தினத்தன்று வெளியாகி பல இளைஞர்களையும் ஈர்த்த படம் ஓ மை கடவுளே. புதுமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தால் அசோக் செல்வனின் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. இந்நிலையில் அடுத்து அனி சசி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் மற்றும் ரித்து வர்மா உள்ளிட்ட நடிகைகள் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இதனிடையே மலையாளத்தில் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் என்னும் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் அசோக்கின் புதிய படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுமுக இயக்குனர் ஸ்வாதினி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருந்தார் அசோக் செல்வன். இந்த படத்தின் தொடக்கத்தில் நிஹாரிகா நாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார். இப்போது அவருக்கு திருமணம் முடிவாகியிருப்பதால், இந்த படத்திலிருந்து விலகியுள்ளார்.

Advertisment

தற்போது நிஹாரிகாவுக்கு பதிலாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக லியான் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.சூர்யா மற்றும் படத்தொகுப்பாளராக ரிச்சர்ட் கெவின் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.