பிரபல நடிகை மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சுந்தர்.சி - நயன்தாரா கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மீனா, அவரது தோழி மற்றும் மறைந்த நடிகை சௌந்தர்யா குறித்து பேசியுள்ளார்.

Advertisment

அந்த நிகழ்ச்சியில் சௌந்தர்யா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அவருக்கும் எனக்குமான போட்டி ஆரோக்கியமானதாக இருந்தது. சௌந்தர்யா ஒரு அற்புதமான மனிதர், எனக்கு நெருங்கிய தோழி. அவரது மரணச் செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்தேன். அதில் இருந்து என்னால் மீள முடியவில்லை. அவர் பயணித்த அதே விமானத்தில் நானும் அவருடன் பிரச்சாரத்திற்கு செல்லவிருந்தேன். அதற்கான அழைப்பு வந்திருந்தது. ஆனால் எனக்கு அரசியல் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் பிடிக்காததால் படப்பிடிப்பு இருப்பதாக சொல்லி தவிர்த்துவிட்டேன்” என்றார். 

2004ஆம் ஆண்டு பா.ஜ.க-வின் பிரச்சாரத்திற்காக அவரும் அவரது சகோதரரும் பெங்களூரில் இருந்து தெலுங்கானாவுக்கு விமானத்தில் பயணம் செய்தனர். அப்போது ஏற்பட்ட விமான விபத்தில், செளந்தர்யாவும் அவருடைய சகோதரரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம், தென்னிந்திய சினிமா உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த விபத்து திட்டமிட்ட கொலை என கடந்த மார்சில் சமூக ஆர்வலர் ஒருவர் பிரபல நடிகர் மோகன் பாபு மீது புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.