mayilsamy son explain about what happend at shivaratri night

நகைச்சுவை நடிகர் மயில்சாமி (57) மாரடைப்பு காரணமாக கடந்த 19 ஆம் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. ரசிகர்கள் முதல் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வரை பெரும்பாலானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்திலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisment

இதனிடையே, மயில்சாமியின் மறைவு குறித்து பல்வேறு வதந்திகள் எழுந்து வரும் நிலையில், அவரது மகன்கள் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர். அப்போது பேசுகையில், "அப்பா அடிக்கடி சொல்லுவார், காசு சம்பாதிப்பது பெரிய விஷயம் இல்லை. மக்களை சம்பாதிக்கணும் என்று. அவர் நிறைய பேரை சம்பாதித்துள்ளார் என்று அவரது இறுதி ஊர்வலத்தில் பார்த்தேன். சிவராத்திரி அன்று மாலை டப்பிங் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்பு கோவிலுக்கு போகலாம் என்று சொன்னார். கேளம்பாக்கம் மேகாநாதேஸ்வரர் சிவன் கோவிலுக்கு சென்றோம். போகின்ற வழியில் 7.30 மணிக்கு சாப்பிட்டோம். 8 மணிக்கு கோவிலுக்கு சென்றோம்.

Advertisment

உள்ளே சென்றவுடன் ட்ரம்ஸ் சிவமணி சாருடன் போனில் பேசினார். அவர் வேறொரு கோவில் கச்சேரியில் இருந்தார். அதை முடித்துவிட்டு அங்கு வருவேன் என்றார். அதன்படி 11 மணிக்கு கோவிலுக்கு வந்தார். இசை கச்சேரி நடந்தது. எப்போதும் போல மகிழ்ச்சியாக சிரிச்சி பேசிட்டு அப்பா இருந்தார். நிகழ்ச்சி முடிவதற்கு 2.45 மணி ஆகிவிட்டது. பின்பு வீட்டிற்கு கிளம்பிட்டோம். வீட்டுக்கு வந்து சாப்பிட்டோம். சாப்பிட்டவுடன் நெஞ்சிலே சாப்பாடு நிக்கிற மாறி இருக்கு... என்று சொன்னார். அந்த சமயத்தில் எப்போதுமே சுடுதண்ணீர் குடிப்பர். உடனே சுடுதண்ணீர்வைத்து கொடுத்தேன். குடித்துவிட்டு தூங்கச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து எழுந்துஎனக்கு சாப்பிட்டது செரிமானம் ஆகவில்லை என்றார். உடனே அம்மாவை பாத்துக்க சொல்லிட்டு நான் மாடிக்கு சென்றேன். ஒரு 5 அல்லது 10 நிமிடம் தான் இருக்கும். அம்மா மேலே வந்து அப்பாவுக்கு மூச்சுவிடக் கஷ்டமாக இருக்கிறதாம். நீ கீழே வா.. என்றார். நான் கீழே சென்று கேட்டவுடன் மூச்சுவிட சிரமமாக உள்ளது என்றார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அப்பாவை அழைத்து சென்றோம். போற வழியிலே அவர் சாய்ந்த நிலையில் இருந்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்றவுடன் அப்பாவை சோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயேஇறந்துவிட்டதாகக் கூறினார்கள். இது தான் நடந்தது" என்றார்.