Skip to main content

தமிழன் கடைசி வரைக்கும் தமிழனாகவே இருக்கணும் - மயில்சாமி பெருமை

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் என்ற ஒன்றை தொடங்கி அதன் மூலம் தமிழ் சினிமாவுக்குள் புதுமுகங்களை அறிமுகம் செய்து வருகிறார் சிவா. இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படம்  ‘கனா’. சிவாவின் நண்பரும், பிரபல காமெடி நடிகருமான அருண்ராஜா காமாராஜை இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் செய்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் நல்ல வசூல் வேட்டை செய்தது. கடந்த வருடத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படமாகவும் இது இருந்தது.
 

mayil

 

 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவா தனது தயாரிப்பு நிறுவனத்தில் இரண்டாவது படத்தை தயாரிக்க இருப்பதாகவும். பிரபல யூ ட்யூப் சேனல் பிளாக் ஷீப் குழுதான் அந்த படத்தில் பணிபுரிய உள்ளதாகவும், ரியோ ராஜ் ஹீரோ நடிக்கிறார் என்று அறிவிப்பு விட்டிருந்தார். நேற்று அந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
 

மேலும் இந்த விழாவில் கலந்துகொண்டு நடிகர் மயில்சாமி பேசும்போது, “இந்தப் படத்தில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, நான் தெய்வமாய் வணங்கும் எம்ஜிஆர் பாடல் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'. மற்றொன்று, அண்ணாமலையார் பெயர் கொண்ட சிவகார்த்திகேயன்.
 

இந்தப் படத்தில் அனைவருமே இளைஞர்கள். எந்த இயக்குநரிடமும் நான் கதை கேட்கவே மாட்டேன். ஏனென்றால், எந்த இயக்குநரும் படம் ஓடக்கூடாது என்று கதை பண்ணமாட்டார்கள். என் வேலை, படம் நடிப்பது மட்டுமே. நான் நன்றாகவே நடிப்பேன், டபுள் மீனிங்கில் பேச மாட்டேன்.

 

நான் போகாத நாடே கிடையாது. எனக்கு இந்தி தெரியாது. தமிழ் மட்டும்தான் தெரியும். அதில்தான் பல குரலில் பேசி உலகம் முழுக்கப் பெயர் வாங்கியுள்ளேன். கேரளாவில் மிமிக்ரி செய்கிறவர்கள், அழகாகவும் உயரமாகவும் இருப்பார்கள். தமிழ்நாட்டில் அப்படி யாரும் மிமிக்ரியில் இல்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு. அந்தக் குறையைத் தீர்த்த சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப நன்றி.
 

ஒரு டிவி நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்து உள்ளே நுழைந்து, பெயர் வாங்கி, அதே டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகி, சினிமாவில் நுழைந்து ஹீரோவாகி, இப்போது படம் எடுத்து 100 பேருக்கு வேலை கொடுப்பதற்காக சிவகார்த்திகேயனை கையெடுத்துக் கும்பிடுகிறேன். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றிபெறும்.
 

யூ ட்யூப், ட்விட்டர், ஃபேஸ்புக் எல்லாம் எனக்குத் தெரியாது. டச் போன் பத்தியும் தெரியாது. ஆனால், அதை வைத்திருந்தால் பிரச்சினை என்று மட்டும் தெரியும். போன் என்பது பேசுவதற்கு மட்டும்தான், தேவையில்லாத தகவல்களைப் பரப்ப அல்ல. எந்த நோக்கத்தில் மனிதன் வாழ்ந்தாலும், நல்ல எண்ணத்துடன் ப்ளஸ்ஸாவே வாழ்ந்தால், அனைத்துமே ப்ளஸ்தான்.
 

எனக்கு மிகப்பெரிய சந்தோஷம், மோடி மீண்டும் பிரதமராக வந்தாலும், தமிழன் தமிழனாகவே இருந்ததுதான். தமிழன் கடைசி வரைக்கும் தமிழனாகவே இருக்கணும். தமிழ்நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளட்டும், தேசியக் கட்சி மட்டும் ஆளக்கூடாது. அப்படி ஆள்வதாக இருந்தால், தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அப்படியென்றால் பெரிய சல்யூட் அடிப்பேன். வஞ்சகம் பண்ற யாருமே தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது.
 

இந்தியா முழுக்க மோடி வந்துவிட்டார் என்றாலும், தமிழ்நாட்டில் வரமுடியவில்லையே என்று சொல்கிறார்கள். அதற்காக நாம் பின்தங்கிப் போகவில்லை. உலகம் முழுக்கத் தமிழனை நினைக்காத நாடே கிடையாது. அதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். உலகத்திலேயே தமிழர்கள் திறமைசாலிகள்தான். உலகளவில் 8 அதிசயம் என்பார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை தஞ்சாவூர் பெரிய கோவில்தான் முதல் அதிசயம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்