Skip to main content

மருத்துவர்களை கல்லெறிந்து தாக்கிய மக்கள்... மாஸ்டர் பட எழுத்தாளர் கேள்வி! 

Published on 02/04/2020 | Edited on 02/04/2020

உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.9 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 47,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் இந்த வைரசால் 1965 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வந்த மருத்துவர்களை மக்கள் கற்களைக் கொண்டு தாக்கியுள்ள சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

rathnakumar


மத்தியப்பிரதேசத்தின் தாத் பட்டி பக்கால் பகுதியில் நேற்று இரண்டு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று கரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் பணிக்காக ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்த மக்கள் மருத்துவர்களைக் கடுமையாகத் திட்டியதுடன் அவர்கள் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலை எதிர்பாராத மருத்துவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

பின்னர் இது தொடர்பாகத் தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். இந்நிலையில் மருத்துவர்கள் மீது கல்லெறிந்த இச்சம்பவத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்களின் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மேயாத மான், ஆடை ஆகிய படங்களின் இயக்குனரும், மாஸ்டர் படத்தின் வசனகர்த்தாவாக இருக்கும் ரத்னக்குமார் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “மனிதத்தன்மை எங்கே ? இது காட்டுமிராண்டித்தனம். இதனை பார்க்கும்போது என் மனம் உடைகிறது. சில நேரங்களில் இந்த வைரஸ் நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் தேவைதான் என தோன்றுகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்