Skip to main content

"தடுப்பூசிகள் தனிநபர்களையும், சமூகங்களையும் பாதுகாக்க வேலை செய்கின்றன" - இளம் நடிகர் வேண்டுகோள்!

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

hvjvjvjg

 

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இருப்பினும், தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். 

 

தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், குழந்தை நட்சத்திரமாக இருந்து இளம் நடிகராக உயர்ந்துள்ள நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்தியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மாஸ்டர் மகேந்திரன், "தடுப்பூசிகள் தனிநபர்களையும்,  சமூகங்களையும் பாதுகாக்க வேலை செய்கின்றன மற்றும் உயிரையும் காப்பாற்றுகின்றன. எனவே தயவுசெய்து அனைவரும் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹாரர் காமெடி ரசிகர்களை கவர்ந்ததா? -‘ரிப்பப்பரி’ விமர்சனம்!

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

Ripupbury movie review

 

எப்படியாவது சினிமாவில் சாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஓடிக்கொண்டு இருக்கும் வளர்ந்து வரும் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக மீண்டும் களத்தில் குதித்துள்ள படம் ரிபப்பரி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹாரர் காமெடி ஜானரில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா இல்லையா?

 

மாஸ்டர் மகேந்திரன் தன் நண்பர்களோடு சேர்ந்து ஒரு சமையல் யூ ட்யூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் ரசிகையாக வரும் ஒரு பெண்ணை பார்க்காமலேயே காதலிக்கிறார் மாஸ்டர் மகேந்திரன். இதற்கிடையே தான் காதலிக்கும் பெண்ணின் ஊரில் யாரெல்லாம் சாதி மறுப்பு காதலோ அல்லது திருமணமோ செய்கிறார்களோ அவர்களை எல்லாம் ஒரு சாதி வெறி பிடித்த பேய் தலையை வெட்டிக் கொள்கிறது. அந்தப் பேயை பிடிக்க போலீஸ், மாஸ்டர் மகேந்திரன் அண்ட் டீமை நியமிக்கிறது. அச்சமயம் மாஸ்டர் மகேந்திரன் தன் காதலியை எப்படியாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்று அந்த ஊருக்குச் செல்கிறார். போன இடத்தில் அந்தப் பேயின் தங்கைதான் தன் காதலி என மாஸ்டர் மகேந்திரனுக்கு தெரிய வர, இதையடுத்து அந்தப் பேயை மீறி மாஸ்டர் மகேந்திரன் தன் காதலியின் கரம் பிடித்தாரா, இல்லையா? அதேபோல் அந்தப் பேய் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களை தலையை வெட்டிக் கொள்ள காரணம் என்ன? என்பதே இப்படத்தின் மீதி கதை.

 

சின்ன சின்ன காமெடி எபிசோடுகளை மாண்டேஜ்களாக காண்பித்து அதையே முழு திரைக்கதையாக மாற்றி அதன் மூலம் ஒரு ஹாரர் காமெடி படத்தைக் கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.கே., முதல் பாதி முழுவதும் கதைக்குள் போகாமல் காமெடி, காதல், பேய் என என்டர்டைன்மென்ட் விஷயங்களை நோக்கி மட்டுமே படம் நகர்கிறது. இரண்டாம் பாதியில் கதைக்குள் அடி எடுத்து வைத்து, அதன் பின் பல்வேறு திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக படம் முடிந்து சற்று ரசிக்க வைத்துள்ளது. முதல் பாதியின் காமெடி காட்சிகள் மனதில் ஒட்டாமல் பல இடங்களில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதேபோல் தேவையில்லாத காட்சிகளும் பல இடங்களில் நீண்டு கொண்டே போவதும் ஆங்காங்கே வேகத்தடை ஏற்படுத்துகிறது. இருந்தும் இரண்டாம் பாதியில் கதைக்குள் அடி எடுத்து வைக்கும் திரைப்படம் அதன் பிறகு வரும் திரைக்கதை வேகம் சுவாரசியமாக அமைந்து படத்தை காப்பாற்றி இருக்கிறது. குறிப்பாக பிளாஷ்பேக் காட்சியில் இருந்து ஆரம்பிக்கும் கதையின் வேகம் படம் முடியும் வரை நிறைவாக அமைந்து படத்தை கரை சேர்க்க முயற்சி செய்திருக்கிறது. 

 

நாயகனாக நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன் பல இடங்களில் நன்றாக காமெடி செய்திருக்கிறார். அதேபோல் காட்சிகளையும் சிறப்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார். ஆனால் இவையெல்லாம் அவருக்கு நன்றாக சூட் ஆகிறதா என்றால் கொஞ்சம் சந்தேகமே. இவரின் முகபாவனைகளும் நடிப்பும் ஓரளவு நன்றாக இருந்தாலும் அவரது வசன உச்சரிப்பு மற்றும் தமிழ் உச்சரிப்பு ஆகியவை இன்னமும் நன்றாக இருந்திருக்கலாம். இத்தனை வருடம் தமிழ் சினிமாவில் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கும் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஏன் இன்னமும் தமிழ் உச்சரிப்பு சரியாக வரவில்லை என்பது தெரியவில்லை. இவருடன் நடித்த இரண்டு நண்பர்களும் சிறப்பாக நடித்து காட்சிகளுக்கு வலு சேர்த்து இருக்கின்றனர். குறிப்பாக உண்மை காதலன் மற்றும் சாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் மிகச் சிறப்பாக நடித்து காட்சிகளுக்கு வேகம் கூட்டி இருக்கின்றனர். இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அனைத்துமே கலகலப்பாக அமைந்து படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இவர்களின் நடிப்பும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. வளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீனி ஃபிளாஷ்பேக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். பேயாக வரும் இவரின் கதாபாத்திரம் ஆங்காங்கே சில இடங்களில் பயமுறுத்துகிறது. இவர் நடித்திருக்கும் ஃபிளாஷ்பேக் காட்சியில் இருந்து ஆரம்பிக்கும் திரைப்படம் அதன் பிறகு சிறப்பாக அமைந்து இறுதியில் நிறைவாக முடிந்திருக்கிறது. படத்தில் வரும் இரண்டு கதாநாயகிகளும் அவரவருக்கான வேலையை நிறைவாக செய்துவிட்டு வழக்கம்போல் சென்று இருக்கின்றனர். 

 

இப்படத்தில் மொத்தம் ஆறிலிருந்து எட்டு பாடல்கள் வரை வருகிறது. அவை அனைத்துமே படத்திற்கு சில இடங்களில் வேகத்தடையாகவும் சில இடங்களில் பிளஸ் ஆகவும் அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் பின்னணி இசையும் பேய் காட்சிகளைக் காட்டிலும் காமெடி காட்சிகளில் சிறப்பாக அமைந்திருக்கிறது. படம் எங்கெல்லாம் தொய்வு கொடுக்க ஆரம்பிக்கிறதோ அங்கெல்லாம் தன் பின்னணி இசை மூலம் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் திவாகரன் தியாகராஜன். தளபதி ரத்தினம் ஒளிப்பதிவில் காமெடி காட்சிகளும் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வேகமான ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. படத்தின் நீளத்தை இன்னமும் கூட குறைத்து இரண்டாம் பாதியில் காட்டிய அக்கறையை முதல் பாதி திரைக்கதையிலும் காட்டி இருந்தால் இப்படம் கண்டிப்பாக இன்னமும் கூட நன்றாக பேசப்பட்டு இருக்கும்.

 

ரிப்பப்பரி - டீசன்ட் முயற்சி!

 

Next Story

“நல்ல கண்டெண்ட் ஜெயிக்கும்...” - நம்பிக்கையில் மாஸ்டர் மகேந்திரன்

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

master mahendran artham movie

 

மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. 

 

இதில் பேசிய  மாஸ்டர் மகேந்திரன், “இந்த படத்தின் தயாரிப்பாளர் நம்மை நம்பி ஹைதராபாத்திலிருந்து இங்கு வந்து படம் தயாரித்திருக்கிறார். நல்ல கண்டெண்ட் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் உழைத்துள்ளோம். இவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தேன். என்னை நம்பி பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரித்துள்ளார். இயக்குநர் மணிகாந்துக்கும் எனக்கும் சண்டை வந்ததே இல்லை. எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. என்னை நம்பி தமிழுக்கு வந்ததாக சொன்னார், நான் எங்கள் டெக்னீஷியன்களை நம்பலாம் என்றேன். படத்தை அழகாக எடுத்துள்ளார். ரோபோ, வினோத் எனக்காக நடித்து கொடுத்தார்கள். நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். ஷ்ரத்தா தாஸ் இந்தியாவில் மிகப்பெரிய பிரபல நடிகை. மிகச்சிறந்த நடிகை கடின உழைப்பாளி தமிழில் பெரிய வெற்றி பெறுவார். நீங்கள் தரும் ஆதரவில் தான் என் திரைப்பயணம் இருக்கிறது” என்றார்.

 

இவரைத் தொடர்ந்து பேசிய நடிகை ஷ்ரத்தா தாஸ், “நான் 40 படங்களுக்கு மேல் தெலுங்கு, மலையாளம்,  இந்தி, ஆங்கிலம் பெங்காலி படங்களில் நடித்துள்ளேன். நான் தமிழில் முதல் முறையாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சி. இப்படத்தில் சைக்காலஜிஸ்ட்டாக நடித்துள்ளேன். நான் சைக்காலஜி டிகிரி முடித்துள்ளேன்.  அதனால் நடிப்பு எளிதாக இருந்தது. கிளாமர் குறைவாக கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. மகேந்திரன் போன்ற அனுபவமிக்க நடிகருடன் நடித்தது மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.