டாடாவிற்கு பிறகு தொடர் தோல்வி படங்கள் கொடுத்து தடுமாறி வரும் கவின் இந்த முறை மாஸ்க் படம் மூலம் அதை மீட்டெடுக்க களத்தில் குதித்து இருக்கிறார். அது அவருக்கு கை கொடுத்ததா, இல்லையா?
தன் அடையாளத்தையே மாற்றும் நோக்கில் பெரிய அரசியல்வாதிக்கு 400 கோடி பணத்தை கொடுத்து அதன் மூலம் அவரை சிஎம் ஆக்கும் திட்டத்தை தீட்டுகிறார் வில்லி ஆண்ட்ரியா. அதற்காக தன் சூப்பர் மார்க்கெட்டில் அவர் அவ்வளவு பணத்தையும் பதுக்கி வைக்கிறார். இதற்கிடையே பல்வேறு போர்ஜரி வேலைகள் செய்து ஓரளவு நல்லவராக இருந்து கொண்டு பல டிடெக்டிவ் மற்றும் ஹேக்கிங் வேலைகள் செய்யும் கவின் ஒரு நாள் இரவு அதே சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்கிறார். சென்ற இடத்தில் ஒரு மாஸ்க் அணிந்த கும்பல் அந்த அனைத்து பணத்தையும் கொள்ளையடித்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் ஆண்ட்ரியா போட்ட திட்டம் கேள்விக்குறியாகி விடுகிறது. இதைத்தொடர்ந்து அந்த மாஸ்க் அணிந்த கும்பலை துப்பறிய கவினை நியமிக்கிறார் ஆண்ட்ரியா. அந்த மாஸ்க் அணிந்த கொள்ளைக்கார கும்பலை கவின் கண்டுபிடித்தாரா, இல்லையா? அவர்கள் யார்? என்பதே இப்படத்தின் மீதி கதை.
தமிழ் சினிமாவுக்கே உரித்தான டெம்ப்ளேட்டுகளை உடைத்து ஒரு எளிமையான கதையை வைத்துக் கொண்டு அதன் மூலம் ஒரு ஹைஸ்ட் திரில்லர் படத்தை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விக்ரநன் அசோக். படம் ஆரம்பித்து முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தாலும் பார்ப்பவர்களுக்கு பல விஷயங்கள் புரியாமல் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. காட்சி அமைப்பில் தெளிவில்லாமல் குழப்பும்படியான வசனங்கள் காட்சிகள் என முதல் பாதி நகர்ந்து இரண்டாம் பாதியில் இருந்து விறுவிறுப்பு ஆரம்பிக்கும் திரைக்கதை போகப்போக பல்வேறு திருப்பமுனைகளுக்கு இடையே நகர்ந்து இறுதி கட்ட காட்சிகள் யாரும் எதிர்பாராத அளவுக்கு சிறப்பான முறையில் அமைந்து ஒரு நல்ல ஐஸ்டு திரில்லர் படம் பார்த்த உணர்வை இந்த மாஸ்க் கொடுத்து இருக்கிறது. முதல் பாதியில் இருந்த வேகத்தடை மற்றும் பல்வேறு லாஜிக் மீறல்கள் மற்றும் ஆங்காங்கே தென்படும் அயர்ச்சி ஆகியவை படத்திற்கு பாதகமாக அமைந்திருந்தாலும் இரண்டாம் பாதி திரைப்படம் விறுவிறுப்பாக அமைந்திருப்பது இந்த படத்தை காப்பாற்றி கரை சேர்க்க உதவி இருக்கிறது. இயக்குனர் ஒரு கமர்சியல் படங்களுக்கே உண்டான டெம்ப்ளேட்டுகளை உடைத்து முடிந்தவரை புதியதாக திரைக்கதைக்குள் எவ்வளவு புதுமைகள் புகுத்த முடியுமோ அந்த அளவு புகுத்தி இக்கால இளைஞர்களை சாட்டிஸ்பை செய்யும் படியாக படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
நாயகன் கவின் வழக்கம்போல் தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். ஹீரோவாக நடித்திருந்தாலும் அதில் சற்றே வில்லத்தனம் கலந்து கிரே ஷேடில் வரும் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். நாயகி ருஹானி சர்மா வழக்கமான நாயகியாக வந்து வழக்கமான விஷயங்களை செய்து விட்டு சென்று இருக்கிறார். வில்லியாக ஒரு ஆண்ட்ரியா வழக்கமான வில்லத்தனம் இல்லாமல் வித்தியாசமான வில்லத்தனம் காட்ட முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார். பல இடங்களில் பயமுறுத்த முயற்சி செய்திருக்கிறார். அதற்கு சில இடங்களில் மட்டும் பலன் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு ஃபேமிலும் அவர் அழகாக தென்படுவதே அதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் இருந்து கடைசி வரை அடக்கி வாசித்த சார்லி இறுதிக்கட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கிறார் அது நன்றாகவும் இருக்கிறது. அரசியல்வாதியாக வரும் பவன் வழக்கமான அரசியல் செய்து விட்டு சென்றிருக்கிறார். பேட்டரி கதாபாத்திரத்தில் வரும் குள்ள மனிதர் சிறப்பாக நடித்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் ரெடீம் கிங்சிலி அவர் வேலையை செய்து விட்டு சென்றிருக்கிறார். மற்றபடி படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்துவிட்டு சென்று இருக்கின்றனர்.
ஜிவி பிரகாஷ் இசையில் கண்ணுமுழி பாடல் ஆடல் ரகம். அதே போல் பின்னணி செய்யும் வழக்கம் போல் சிறப்பான முறையில் கொடுத்து படத்துக்கு வலு சேர்த்து இருக்கிறார். ஆர் டி ராஜசேகர் அனுபவ ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாகவும் தரமாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக இரவு நேர சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பு.
இரண்டாம் பாதியில் இருந்த மாறுபட்ட திரைக்கதையும் அதற்கு ஏற்றார் போல் திருப்புமுனைகள் நிறைந்த கதை அமைப்பும், விறுவிறுப்பும் முதல் பாதியிலும் இருந்திருந்தால் இந்த படம் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும்.
மாஸ்க் - களவாணி!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/25/b-2025-11-25-13-43-02.jpg)