தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ மதம் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்று இருக்கின்றன. அந்த வகையில் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த மரியா திரைப்படம் எந்த அளவு உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது? அது பார்ப்பவர்களிடமிருந்து வரவேற்பை பெற்றதா, இல்லையா?
கன்னியாஸ்திரி ஆக இருக்கும் நாயகி சாய் ஸ்ரீ தன் கசின் வீட்டிற்கு விடுமுறைக்காக வருகிறார். வந்த இடத்தில் அங்கு இருக்கும் ஆண்கள் பெண்கள் சகஜமாக சந்தோஷமாக சராசரி வாழ்க்கை வாழ்வதை பார்த்து அவருக்கும் அதே போல் வாழ வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. இதனால் அவர் தன் கன்னியாஸ்திரி வாழ்க்கையை துறக்க ஆசைப்படுகிறார். அதற்காக இயேசு கிறிஸ்துவை வெறுக்கும் அவர் சாத்தான் வழிபாட்டை நோக்கி செல்கிறார். இதன் பிறகு அவர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எதிர்வினைகள் என்ன? அதை அவர் கடந்து சென்றாரா, இல்லையா? அவர் ஆசைப்பட்டது போல் வாழ்க்கை நாயகி சாய் ஸ்ரீக்கு அமைந்ததா, இல்லையா? என்பதே இந்த மரியா படத்தின் மீதி கதை.
மிகவும் கான்ட்ரவர்சியான ஒரு கதையை எடுத்துக்கொண்டு படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குநர் அதை ஓரளவு உண்மைக்கு நெருக்கமாக கூறியிருக்கிறார். கிறிஸ்தவ சமுதாயத்தில் கன்னியாஸ்திரி மற்றும் சாமியாராக வாழ்பவர்கள் ஒரு கட்டத்தில் அதிலிருந்து விடுபட்டு சாதாரண வாழ்க்கையை நோக்கி செல்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் அதை இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் பெரிதாக தொட்டுக் கொண்டதும் கிடையாது. பெரிதாக காட்டியதும் இல்லை. அதை இந்த படத்தில் பிரதான கதையாக எடுத்துக் கொண்ட இயக்குநர் அதனுள் விரசத்தை நுழைத்து அதே போல் சாத்தான் வழிபாட்டையும் நுழைத்து படத்தை வேறு ஒரு திசைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அது பார்ப்பவர்களுக்கு பல இடங்களில் நெருடலை கொடுத்திருக்கிறது. அதே போல் திரைக்கதையும் நேர்த்தியாக இல்லாமல் ஆங்காங்கே தொய்வோடு இருக்கிறது. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குநர் திரைக்கதைக்கு இன்னமும் கூட முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். அதேபோல் படத்தின் மேக்கிங்குக்கும் மற்றும் திரைக்கதை வேகத்துக்கும் இன்னமும் கூட சிறப்பை எடுத்துக் கொண்டு உருவாக்கி அதே சமயம் சொல்ல வந்த விஷயத்தை சரியான முறையில் சொல்லியிருந்தால் இந்த படம் சிறப்பான முறையில் புரட்சி ஏற்படுத்தக்கூடிய படமாக இருந்திருக்க கூடும். படத்தில் இயக்குநர் கூறி இருக்கும் கருத்து ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும் அதை ஓவர் டோஸ் ஆக முகம் சுளிக்கும்படி அளவிற்கு அதே சமயம் உண்மைக்கு சற்றே தள்ளி சில விஷயங்களை கூறியிருப்பதை தவிர்த்து இருக்கலாம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை ரசிகர்களிடமே விட்டுவிட்டு இருப்பது பார்ப்பவர்களுக்கு பல இடங்களில் குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை ஒரு கதையில் பயணிக்கும் திரைப்படம் இறுதி கட்டத்தில் எதை நோக்கி செல்கிறது என்பது புரியாமல் பலர் குழம்பி விடுவது போல் படம் முடிகிறது. அதுவே படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. சொல்ல வந்த கருத்தை உண்மைக்கு நெருக்கமாக நேரடியாக கூறி இருந்தால் இந்த படம் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.
படத்தில் தெரிந்த முகங்களாக இருப்பது ரங்கோலி பட புகழ் சாய் ஸ்ரீ, பாவல் நவகீதன் மற்றும் யாத்திசை பட புகழ் சித்து குமரேசன் ஆகியோர் மட்டுமே. நாயகி சாய் ஸ்ரீ கன்னியாஸ்திரி கதாபாத்திரத்தில் சிறப்பான முறையில் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார். ஒரு இளம் பெண் கன்னியாஸ்திரி ஆக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குள் இருக்கும் சுகதுக்க பாசங்கள் ஏக்கங்கள் ஆகியவை அப்படியே சிறப்பான முறையில் தனது முக பாவனைகள் மற்றும் மேனரிசம் மூலம் வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவர் ரங்கோலி படத்திலேயே சிறப்பான முறையில் நடித்திருப்பார் அதையே இந்த படத்திலும் தொடர்ந்து செய்து கவனம் பெற்று இருக்கிறார். இந்த முழு படத்தையும் இவரே தாங்கிப் பிடித்திருக்கிறார். சாத்தான் போதகராக வரும் பாவல் நவகீதன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றும் ஒரு நாயகி சித்து குமரேசன் படம் முழுவதும் வருகிறார் இந்த கால 2k இளசுகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். மற்றபடி படத்தில் நடித்த அத்தனை புதுமுக நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து விட்டு சென்று இருக்கின்றனர்.
மணிசங்கர் ஜி ஒளிப்பதிவு கலைப்படத்திற்கான ஒளிப்பதிவாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவில் இன்னமும் கூட நேர்த்தி தேவைப்படுகிறது. அரவிந்த் கோபாலகிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்சன் இசை ஓர் அளவு ஓகே.
கிறிஸ்தவ மதத்தில் இருக்கும் சர்ச்சையான விஷயத்தை தைரியமாக எடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஆனால் அதை கூறிய விதம் மற்றும் காட்டிய விஷயங்கள் ஆகியவை கிறிஸ்தவ மதத்திற்கும் மற்றும் மற்ற மதத்திற்கும் மற்றும் மனிதர்களின் வாழ்வியலுக்கு எதிரானவையாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேபோல் ஒரு கன்னியாஸ்திரி பெண்ணின் ஆசா பாசம் ஏக்கம் உணர்வுகள் ஆகியவைகளை பற்றி பேசும் படமாக ஆரம்பிக்கும் திரைப்படம் போகப்போக பாலியல் உறவு சம்பந்தப்பட்ட விஷயத்துக்குள் மிகவும் டீப்பாக சென்று வேறு வேறு திசைக்கு பயணித்து சாத்தான் உள்ளிட்ட விஷயங்களோடு கதை பயணிக்கும் படி இருப்பதை தவிர்த்து விட்டு அழகான காதல் மற்றும் குடும்ப உறவு மூலம் இதற்கான தீர்வை இயக்குனர் கூறி இருக்கலாம். அதை விட்டுவிட்டு காண்ட்றவர்சியான விஷயங்களை மட்டும் இயக்குனர் கையில் எடுத்திருப்பது படத்திற்கு பாதகமாக அமைந்திருக்கிறது.
மரியா - சர்ச்சை!