
மறைந்த கலை இயக்குநர் மிலனின் மனைவி கங்குவா படத்தில் பணியாற்றிய அனுபவங்களை நம்மிடையே விவரிக்கிறார்.
கலை இயக்குநர் மிலன் கங்குவா படத்தின் படப்பிடிப்பு தளத்தைக் கொடைக்கானலில் தேர்வு செய்தார். அங்கிருந்து பார்த்தால் பழனி முருகன் கோயில் தெரியும். அந்த மலைப்பகுதியில் வேலை செய்யும்போது யாருக்குமே டவர் கிடைக்காது. மொபைல் யூஸ் செய்யாமல் மனிதர்களுடன் பேசி வேலை செய்தது, பெரிய குடும்பத்துடன் இணைந்து சந்தோஷமாக வேலை செய்தது போல் இருந்தது. அங்குள்ள பழங்குடியின மக்கள் வேலை செய்ய உதவி செய்தனர். அவர்களால்தான் கங்குவா படத்தில் வரும் குடில்களை முழுமையாக அமைக்க முடிந்தது. படத்தில் வில்லன் கதாபாத்திரம் வலுவாக இருப்பதற்கேற்ப வில்லன் வாழ்ந்த பகுதியின் இடத்தையும் பாபி தியோலின் உடை, ஆயுதம், உள்ளிட்ட அனைத்தையும் எலும்புகளால் உருவாக்கினோம்.
மிலன் மறைந்த பிறகு கங்குவா படத்தில் வரும் கப்பல்களை உருவாக்கினோம். மிலனின் உதவியாளர் சஞ்சய் வர்மா அதை உருவாக்கியதில் பெரும் பங்களிப்பைக் கொடுத்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் கப்பல் முக்கியமானதாக இருந்தது. அதனால் ஒரு பெரிய கப்பலை உருவாக்கிய பிறகு நிறையக் கப்பல்களை வாங்கி படத்திற்கேற்ப அதில் சில மாற்றங்கள் செய்தோம். இந்த படத்தில் கடந்த காலத்தைக் காட்ட நிறைய வேலைகள் செய்தோம் அதற்கு இயற்கையும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது. அதனுடன் சேர்த்து எங்கள் டீமும் புதிய முயற்சிகளை முன்னெடுத்துச் சிறப்பாக கங்குவா உலகத்தை உருவாக்கினோம்.
கங்குவா ‘ஃபயர் சாங்...’ பாடலின் பின்னணியில் வரும் காட்சிகளுக்கேற்ப படப்பிடிப்பு தளத்தை வடிவமைத்ததில் முழு கிரெடிட்டையும் மிலனுக்கு கொடுப்பேன். ஏனென்றால் அவர் அதற்குத் தகுதியானவர். அந்த பாடல் முழுக்க நிறைய நெருப்புகளை உபயோகித்தோம். கேமரா அருகில் கூட லைட் வைக்காமல் தீ பந்தத்தை வைத்துத்தான் படம்பிடித்தனர். அதே போல் இன்றைய காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை முடிந்த அளவு வேறுபடுத்திக் காட்டியிருப்போம். இன்றைய காலத்திற்கேற்ப அட்வான்ஸாகவும் டிஜிட்டலாகவும் இருக்கக்கூடிய அனைத்தும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இயக்குநர் சிவா விளக்கிவிடுவார். அது வேலை செய்ய உதவியாக இருக்கும்.

படத்தில் வரும் ஒவ்வொரு தீவுப் பகுதியில் வெவ்வேறு விதமான ஆயுதங்களைப் பயன்படுத்தியிருப்பார்கள். அந்த காலத்தில் கங்குவா கதாபாத்திரம் கல், எலும்பு, தோல், கயிறு உள்ளிட்டவற்றால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்தியிருப்பார். கங்குவா கத்தியில் கழுகு நகங்கள் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த ஆயுதங்களையெல்லாம் பார்க்கும்போது மிலன் செய்த வேலைகள் ஞாபகம் வருகிறது. அவர் இந்த ஆயுதங்களைச் செய்யும்போது அவருடன் நானும் இருந்தேன். படத்தில் பார்த்த அனைத்து ஆயுதங்களும் மிலன் செய்ததுதான், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்களைச் செய்தாலும், அதில் மிலனின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும். இந்த ஆயுதங்களைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
மிலன் செய்யும் வேலைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் விஷ்காம் படித்திருந்தாலும் இந்த வேலைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்ற வேலைகளை ஒப்பிடும்போது இந்த வேலையில் நிறைய ஆய்வுத் திறன் இருக்க வேண்டும். ஒரு பொருளை உருவாக்கினால் அது தொடர்பான பல பொருட்களை உருவாக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு ஆடை அணிந்தால் அதற்கேற்ப காலணிகளை அணிவோம். அதனால் கலை இயக்குநர் ஆவதற்கு ஆய்வுத் திறன் என்பது முக்கியமானது. கங்குவா படத்தில் கை, கால்களில் போடும் அணிகலன்களுக்கு நிறையப் பழங்குடி இன மக்கள் உதவினார்கள் அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. அவர்கள் அந்த வேலையை மிகவும் ரசித்துச் செய்தார்கள். அவர்களுக்குள் நிறையத் திறமை இருப்பது இங்கு யாருக்கும் தெரியவில்லை. அவர்கள் சாலையோரங்களில் சின்ன சின்ன அணிகலன்களை விற்கும் போது பேசிக்கொண்டே வேலையைச் செய்வார்கள். எங்களிடம் அவர்கள் வேலை பார்க்கும்போது எந்தளவு பொருட்கள் செய்யச் சொன்னாலும் வெறும் 1 மணி நேரத்தில் அதைச் செய்து முடித்துவிடுவார்கள். அவர்களுக்கு இந்த நேர்காணல் வாயிலாக நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய குழுவிற்கும் நன்றி என்றார்.