/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/337_14.jpg)
துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ என்ற படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், தற்போது ‘வாழை’ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மாரி செல்வராஜின் மனைவி திவ்யாவின் பெயரில் உருவாக டிஸ்னி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாரி செல்வராஜின் அக்கா மற்றும் மாமன் மகன்களான ராகுல் மற்றும் பொன்வேல் ஆகியோர் இப்படத்தில் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் இணைந்து மேலும் இரண்டு சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் வெளியானது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் ‘தேன் கிழக்கு...’ கடந்த ஜுலை 18ஆம் தேதி வெளியாகியிருந்தது. இப்பாடல் ஆசிரியர் - மாணவன் உறவை விவரிக்கும் வகையில் அமைந்திருந்தது. யுகபாரதி வரிகளில் அப்பாடலை தீ பாடியிருந்தார். இதையடுத்து ஜூலை 29ஆம் தேதி படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு ஊருல ராஜா...’ வெளியானது. இப்பாடல் படத்தில் வரும் நான்கு சிறுவர்கள் படும் கஷ்டத்தையும் சந்தோஷத்தையும் விவரிக்கும் வகையில் அமைந்திருந்தது. இதைத் தொடர்ந்து ‘பாதவத்தி’ எனும் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டிருந்தனர்.
இதனிடையே இப்படம் குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீ ராம், “இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை வெளிக்கொண்டு வருகிறது. உங்கள் மனதை வருடும். பேசவிடாமல் செய்யும். ஒவ்வொரு படமும் ஒரு பாடம்” என அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டிருந்தார். அடுத்ததாக இயக்குநர் மற்றும் நடிகர் மிஷ்கின், “வாழை படம் பார்த்து எனக்கு மூன்று நாள் தூக்கம் இல்லாமல் பைத்தியமே பிடித்துவிட்டது” என சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரில், விடுமுறையில் பள்ளி மாணவன் வாழை தூக்கும் வேலைக்காக அவரது குடும்பத்தினரின் கட்டாயத்தின் பேரில் போவதும் போலவும் அதற்கு மறுப்பு தெரிவித்து முதலில் அடம் பிடிக்கும் மாணவன் பின்பு போவதும் போலவும் காட்சிகள் இடம்பெறுகிறது. பின்பு அந்த மாணவன் தற்கொலை செய்வது போலக் காட்சிகள் வருகிறது. அந்த மாணவன் ஏன் தற்கொலை செய்தான் என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அம்மாணவனின் வாழ்க்கையை சொல்லியிருப்பது போல் தெரிகிறது. இப்படம் வருகிற 23ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)