/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/301_41.jpg)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான்கு சிறுவர்கள் மற்றும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. மாரி செல்வராஜின் மனைவி திவ்யாவின் பெயரில் உருவாக டிஸ்னி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அமீர், வெற்றிமாறன், மிஷ்கின், ராம், நெல்சன் உள்ளிட்ட பலரும் நடிகர்கள் கவின், ஹரிஷ் கல்யாண், சூரி, த்ருவ் விக்ரம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் பாரதிராஜா மற்றும் சிம்பு ஆகியோர் காணொலி வாயிலாகப் பேசி அனுப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் பேசுகையில், “பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன்... இந்த படங்களைப் பற்றி பேசும் போது எனக்கான ஒரு இடம் ஈஸியாக அமைந்தது. ஆனால் இந்த படத்திற்கு இல்லை எனத் தோன்றுகிறது. முதல் முறையாக என்னுடைய அம்மா, அப்பா பார்க்கக்கூடாது என நினைத்து ஒரு படம் எடுத்திருக்கிறேன். அப்போ எந்தளவிற்கு இந்த படம் இருக்கும் என்பதை நீங்கள் முடிவு பண்ணிக்கோங்க. இதற்கு முன்னாடி நான் பண்ண படங்களில் ஃபர்ஸ்ட் எடிட் பார்க்கும் போது இப்படி ஆனது கிடையாது. வாழை படத்தைப் பார்த்ததும் கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது. அதன் பிறகு சில நாட்கள் அமைதியாகவே இருந்தேன். அதற்கு ஒரே காரணம் இந்த சம்பவம் நடந்த நாளிலிருந்து இந்த நாள் வரை நான் சந்தித்த மனிதர்கள் அவர்கள் தந்த வலி, அத்தனையும் படத்தில் சொல்லியிருப்பதால் வாழ்ந்து முடித்துவிட்டோம் என்ற உணர்வு எனக்குள் வந்துவிட்டது.
இந்த படத்தை என்னுடைய சிறந்த படம் என எல்லாரும் சொன்னார்கள். இந்த படத்தை விட சிறந்த படத்தை அடுத்து எடுக்க ட்ரை பண்ணிக்கொண்டே இருப்பேன். ஆனால் என்னுடைய உச்ச பச்ச கண்ணீர் என்றால் அது வாழை தான். இதற்கு மேல் எந்த படம் எடுத்தாலும் எனக்கு அழுகை வராது. இந்த படம் எடுக்க எனக்கு திராணி கொடுத்த என்னுடைய இயக்குநருக்கு நன்றி. அவர் தான் எனக்கு இது தான் கலை எனச் சொல்லிக் கொடுத்தார். அப்போது தான் என்னுடைய கண்ணீர் எல்லாம் கலையாகத் தெரிய ஆரம்பித்தது. இது எல்லாம் சேர்ந்து ஒரு படம் எடுத்திருக்கிறேன். இந்தப் படத்தை ராம் சாருக்கு காணிக்கை ஆக்குகிறேன். அவருக்கு அர்ப்பணிக்கிறேன். இங்கு வந்தவர்கள் என்னுடைய படைப்பிற்காக வந்திருக்கிறார்கள் என நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. என்னுடைய படங்கள் அவர்களுக்கு புடிச்சிருக்கு. படத்தில் ஒரு உண்மை இருக்கு. இந்த பையனுக்காகப் போய் பேசலாம் என அவர்கள் முடிவெடுத்து வந்ததது ரொம்ப பெருமையா இருக்கு. என்னை பற்றி புரிந்து கொள்வதற்காகவும் என்னை சுற்றி இருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் படமாக இந்த படம் இருக்கும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)