தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி சாதனையின் கொண்டாட்டமாக ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற பெயரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி, நான் முதல்வன், முத்லவரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், விளையாட்டின் சாதனையாளர்கள், சிறப்புக் குழந்தை சாதனையாளர்கள் இது போன்ற ஏழு திட்டங்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.

Advertisment

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்நிகழ்வினில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதல்வர் ரேவந்த ரெட்டி கலந்து கொண்டார். இவர்களை தவிர்த்து திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். சிவகார்த்திகேயன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, பிரேம் குமார், தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Advertisment

நிகழ்வில் இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு பேசுகையில், “என்னுடைய எல்லா படத்திற்கும் முதலமைச்சர் போன் பன்னி பேசுவார். அதற்காக காத்துக் கொண்டிருப்பேன். ஆனால் வாழை படத்திற்கு ஸ்பெஷலாக காத்துக் கொடிருந்தேன். ஏனென்றால் ஒரு மாநில முதல்வர், வாழை படத்தை பார்த்துவிட்டு என்ன சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன். எதிர்பார்த்தது போல் போன் வந்தது. அவர் பேசியது, படத்தில் வரும் சிவநைந்தனிடம் முதல்வர் பேசினால் எப்படி இருக்கும் என்ற உணர்வை தந்தது. தமிழ்நாடு அரசிடம் நான் என்றாவது ஒரு நாள் பதிவு பண்ண வேண்டும் என நினைத்த விஷயம் காலை உணவுத் திட்டம். 

படத்தில் அந்த சிவநைந்தன், பசி தாங்க முடியாமல் வாழைப்பழம் திருடுவான். நான் திருட்டு பழக்கத்தை கற்றுக் கொண்டது பசியில் தான். என்னுடைய வீட்டிற்கும் ஸ்கூலுக்கும் நாலு கிலோ மீட்டர் இருக்கும். தினமும் நடந்து போயிட்டு நடந்து வருவேன். நான் எழுந்திருக்கும் போதே அம்மா, அப்பா கிளம்பி போய்டுவாங்க. பசியோடு தான் ஸ்கூலுக்கு போவேன், அதே பசியோடு தான் வீட்டுக்கு வருவேன். அந்த போகிற இடத்தில் வாழை தோட்டத்துக்குள் புகுந்து வாழைப்பழம் சாப்பிடுவதுதான் எங்களுடைய உணவாகவே இருக்கும். ஏனென்றால் நாலு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். பசி என்பதே ஒரு போராட்டமாக இருக்கும். என் கூட படித்த நிறைய பேர் பசியாலேயே படிப்பை நிப்பாட்டியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் காலை உணவு திட்டம் அறிவித்தவுடன் அந்த படிப்பை நிப்பாட்டியவர்கள் அழுதிருப்பார்கள்.

Advertisment

பள்ளிகூடத்தில் நான் முழுக்க முழுக்க கற்று கொண்ட விஷயம், மீளமுடியாது, தாண்ட முடியாது, ஜெயிக்க முடியாது என்ற விஷயம் தான். அதற்கு காரணம் சாதிய உளவியல் தான். அதனால் பள்ளியில் நான் பட்ட கஷ்டங்கள் அதிகம். ஆனால் இன்று பள்ளிகளில் சமூகநீதி, சமத்துவம் போன்ற வார்த்தைகள் ஓங்கி ஒலிக்கிறது. அதை பள்ளி கல்வித்துறை சிறப்பாக செய்து வருகிறது” என்றார். வாழை படம் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த நிலையில் அப்படம் மாரி செல்வராஜின் சிறு வயது வாழ்க்கை மற்றும் ஒரு துயர சம்பவம் குறித்து எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.